புனேவை தளமாகக் கொண்ட சஹ்யாத்ரி மருத்துவமனைகளை வாங்குவதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனை குழுமமாக மணிப்பால் மருத்துவமனை உருவெடுக்கவுள்ளது.
டிசம்பர் 31, 2024 நிலவரப்படி $194 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 16.65 லட்சம் கோடி ரூபாய்) நிகர சொத்துக்களைக் கொண்ட ஒன்டாரியோ டீச்சர்ஸ், 2022 இல் சஹ்யாத்ரியில் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியது.

உலகளாவிய முதலீட்டாளரான ஒன்டாரியோ டீச்சர்ஸ் ஓய்வூதியத் திட்டத்திடமிருந்து (ஒன்டாரியோ டீச்சர்ஸ்) சஹ்யாத்ரி மருத்துவமனைகளை கையகப்படுத்துவதற்கான உறுதியான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக மணிப்பால் மருத்துவமனைகள் நேற்று அறிவித்தது.
இதன்மூலம் மணிப்பால் மருத்துவமனைகளின் மொத்த படுக்கை எண்ணிக்கை சுமார் 12,000 ஆக உயரும் என்றும், இது இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனை நெட்வொர்க்குகளில் ஒன்றாக மாறும் என்று அந்த நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புனேவை தளமாகக் கொண்ட சஹ்யாத்ரி மருத்துவமனைகளை கையகப்படுத்துவதன் மூலம் புனே, நாசிக், அஹில்யா நகர் மற்றும் கரட் முழுவதும் உள்ள 11 மருத்துவமனைகள் மணிப்பாலின் நெட்வொர்க்கில் சேர்க்கப்படும்.
இதனால் மணிப்பாலின் மொத்த மருத்துவமனைகளின் எண்ணிக்கை 49 ஆக அதிகரிக்கும்.
ஒப்பந்தத்தின் நிதி விவரங்கள் வெளியிடப்படவில்லை, இருந்தபோதும் இந்த ஒப்பந்தம் சுமார் ரூ.6,000 கோடி என நம்பப்படுகிறது.
இந்த கையகப்படுத்தல் மூலம், மணிப்பால் மேற்கு இந்தியாவில் அதன் இருப்பை விரிவுபடுத்தவும், அதன் பான்-இந்தியா தடத்தை அதிகரிக்கவும் வழி செய்துள்ளது.