சென்னை: தமிழகத்தில் நாளை 60 முதல் 80 சதவீதம் வரை பேருந்துகள் இயக்கப்படும் என தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இன்றைய போராட்டத்தில் சுமார் 10 சதவிகிதம் அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கம் நடைபெற்றது பொதுமக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், நாளை அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிராக  அகில இந்திய தொழிற்சங்கங்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  2 நாள் வேலைநிறுத்தம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் பல மாநிலங்களில் போக்குவரத்து, வங்கிப் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் முடங்கிப்போய் உள்ளன.
இந்த போராட்டத்தால், தமிழ்நாட்டில் போக்குவரத்து துறை, வங்கி சேவை உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் மின்துறை, தபால்துறை, ரயில்வே துறை, ஊழியர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், பணிகள் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆட்டோ தொழிற்சங்கத்தினர், கால்டாக்சி உள்பட தொழிற்சங்கத்தினரும்,  போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
இன்று போக்குவரத்துறையின் போராட்டம் காரணமாக, அரசு பேருந்துகள் இயங்காததால், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டனர். அவர்கள் மின்சார ரெயில்கள், மெட்ரோ ரயில்களை பிடித்து பணிக்கும், கல்லூரிகளுக்கும் சென்றனர். இது பொது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால், தமிழகஅரசு 67% பேருந்துகள் ஓடவில்லை என்றும் 33% (5,023) பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்தது.
இதையடுத்து நாளை அத்தியாவசிய பணிகள் பாதிக்காமல் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என்றும், 60 முதல் 80 சதவீதம் வரை பேருந்து கள் இயக்கப்படும் என தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி நாளை வழக்கம்போல் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டதாகவும், அத்தியாவசிய பணிகள் பாதிக்காமல் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் எனவும் கூறியுள்ளார். மேலும், பொதுமக்கள் நலன் கருதி சாதாரண ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு செல்வார்கள் என்றும் முன்னணி ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டார்.