சென்னை: தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60 % பங்கு வழங்கப்படும் என்றும்,  1000 திருக்கோயில்களில் திருப்பணிகள் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த அறநிலையத்துறை  அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று அறநிலையத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறைமீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக எதிர்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய  கேள்விகளுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் பதிலளித்து ,பின்னர்,பு திய அறிவிப்புகளை வெளியிட்டனர்.

சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் உள்ள முக்கிய தகவல்கள்:

அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60 % பங்கு தொகை தரப்பட்டும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்பு கட்டணச்சீட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மாநிலம் முழுவதும 1000 திருக்கோயில்களில் ரூ.500 கோடியில் திருப்பணிகள், பராமரிப்பு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழர் பண்பாடு மற்றும் கலாசாரத்தை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த கலாசார மையங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கோயில்களுக்குச் சொந்தமான அசையா சொத்துக்கள் மூலம் 2021 ஜூலை 1-ம் தேதி முதல் 2022 மார்ச் 31-ம் தேதி வரை ரூ.151.65 கோடி குத்தகை வருமாமானம் ஈட்டப் பெற்றுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்துசமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான நில விவரங்கள் வருவாய்த்துறையின் “தமிழ்நிலம்” வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள பதிவுகளோடு ஒப்பிடுதல் மற்றும் சரிபார்த்தல் பணியானது தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்நிலை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மொத்தமுள்ள 4.78 லட்சம் ஏக்கர் நிலங்களில், 3.43 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலங்கள் வருவாய்த்துறை ஆவணங்களோடு முழுமையாக ஒத்துப்போகும் இனங்கள் (Fully matched items) என உறுதி செய்யப்பட்டு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரால் கடந்த 6.9.2021 என்று இத்துறையின் இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

நிலவிவரங்கள் ஒப்புநோக்கும் பணியில் பகுதியாக ஒத்துப்போகும் (Partially matched) நிலங்கல் குறித்தும், அதுபோல தமிழ்நிலப் பதிவில் இல்லாத புதிய இனங்கள் குறித்தும் தொடர்புடைய சமய நிறுவனங்களால் முழுமையாக ஒத்துப்போகும் இனங்களாக மாற்றுவதற்கு வருவாய்த துறையின் தகுதியான அலுவலர் முன் மேல்முறையீடடு செய்யப்பட்டு வருகிறது.

இந்துசமய அறநிலையத்துறையின் நிலங்கள் தொடர்பான தரவுத் தளத்துடன் (Data base) வருவாய்த் துறையின் “தமிழ் நிலம்” வலைதளத்துடன் ஒப்பு நோக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஒப்புநோக்குதல் மூலமாக அறியப்படும் விவரங்கள் இந்து சமய அறநிலையத்துறை தரவுத்தளத்தில் சரிபார்த்துப் பதிவேற்றப்படும்.

இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்களைப் பாதுகாத்தல், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் ஆகியவை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு இத்துறையின் ஒவ்வொரு உதவி ஆணையர் பிரிவிலும் ஒரு தனி வட்டாட்சியர் வீதம் 36 தனி வட்டாட்சியர்களும் மற்றும் தலைமையிடத்தில் இரு தனி வட்டாட்சியர்களும் இப்பணிக்காக வருவாய்த்துறை மூலம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்து சமய அறநிறுவனங்களுக்குச் சொந்தமான 22,600 கட்டடங்களும், 33,665 மனைகளும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

விவசாய நிலங்கள் 1,23,729 நபர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. கடந்த 1.7.2021 முதல் 31.3.2022 வரையிலான காலத்திற்கு மட்டும் திருக்கோயில்களுக்குச் சொந்தமான மேற்கண்ட அசையாச் சொத்துக்களிலிருந்து ரூபாய் 151.65 கோடி குத்தகை வருமானம் ஈட்டப் பெற்றுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2021 மே முதல் 2022 மார்ச் வரை 133 திருக்கோயில்களுக்கு சொந்தமான 720.83 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், மதுரை, லால்குடி, மன்னார்குடி, நாகப்பட்டினம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 10 இடங்களில் வருவாய் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

கும்பகோணம், சேலம் மற்றும் தென்காசி ஆகிய இடங்களில் வருவாய் நீதிமன்றங்களின் முகாம் இயங்கி வருகின்றன.

இந்துசமய அறநிறுவனங்களுக்குச் சொந்தமான வேளாண் நிலங்களுக்கு வரவேண்டிய குத்தகை நிலுவைத் தொகைகளை வசூல் செய்யவும், வேளாண் நிலங்களுக்கு குத்தகைத் தொகை நிர்ணயிக்கவும், குத்தகை செலுத்த மறுக்கும் குத்தகைதாரர்களை வெளியேற்றவும் 1961-ம் ஆண்டு தமிழ்நாடு பொது பொறுப்புரிமை (வேளாண்மை நிலங்களின் ஒழுங்குமுறை) சட்டத்தின்கீழ் இந்துசமய அறநிறுவனங்களால் தனி துணை ஆட்சியர் தலைமையிலான வருவாய் நீதிமன்றங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவை தீர்வு செய்யப்படுகின்றன.

வருவாய் நீதிமன்றங்களின் முன்பாக நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கை மொத்தம் 11,418 ஆகும். இவற்றில் 6167 வழக்குகளில் 2022 மார்ச் 31-ம் தேதி வரை தீர்வு காணப்பட்டுள்ளன.

ரூ.1768.03 லட்சம் குத்தகை நிலுவைத் தொகைக்கு தீர்பாணை பெறப்பட்டு, இதுவரை ரூபாய் 476.69 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள அறநிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்கள், நிலவுடமை பதிவு மேம்பாட்டுத் திட்ட நடவடிக்கையின்போது, தனி நபர் பெயரில் தவறுதலாகப் பட்டாமாற்றம் செய்யப்பட்ட இடங்களைக் கண்டறிந்து திருக்கோயில் நிருவாகத்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்து உத்தரவு பெற்று நிலங்கள் மீட்கப்படுகின்றன. கடந்த 2021 மே 7-ம் தேதி முதல் 2022 மார்ச் 31-ம் தேதி வரையிலான காலத்தில் 133 திருக்கோயில்களுக்குச் சொந்தமான 720.83 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள அறநிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்கள், வருவாய்த் துறையில் கணினிச் சிட்டா தயாரிக்கும் போது தவறுதலாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறான இனங்களைக் கண்டறிந்து திருக்கோயில் நிருவாகத்தால் சம்பந்தப்பட்ட வருவாய்க் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்து உத்தரவு பெற்று நிலங்கள் மீட்கப்படுகின்றன. இதுவரையில் 94 திருக்கோயில்களுக்குச் சொந்தமான 592.69 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.