மும்பை:

மகாராஷ்டிராவில் 17 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. இதில் 12 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த கல்லூரி நிர்வாகங்கள் மறுத்து வருகிறது. இதனால் 250 முதுகலை பாடத்திட்ட சீட்கள் காலியாக இருக்கும் நிலை உருவாகியுள்ளது.

தற்போது முதல் கட்ட மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது. கட்டண ஒழுங்கு முறை ஆணையத்துக்கும் கல்லூரி நிர்வாகங்களுக்கு இடையிலான பிரச்னைக்கு தீர்வு ஏற்படாததால் இந்த ஆண்டு 60 சதவீத முதுநிலை சீட்கள் காலியாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் மாநில அரசும் தலையிட மறுத்துவிட்டது.

நிர்வாக இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு சாதாரண கட்டணத்தை விட 3 மடங்கு அதிக கட்டணம் தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப்படுகிறது. இதே வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இடஒதுக்கீடு சேர்க்கைக்கு 5 மடங்கு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தற்போது நிர்வாக இட ஒதுக்கீட்டிற்கும் 5 மடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தனியார் கல்லூரிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பான பிரச்னை தான் தற்போது கட்டண ஒழுங்கு முறை ஆணையத்துக்கு கல்லூரி நிர்வாகங்களுக்கும் இடையே நிலவுகிறது. இதற்கு அனுமதி வழங்கப்படும் வரை மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க தனியார் கல்லூரி சங்கம் முடிவு செய்துள்ளது.