சென்னை: சென்னையில் நேற்று மட்டும் (20ந்தேதி) 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று (அக்.20) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் புத்தாடை உடுத்தி, பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை சுவைத்தும் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து சென்னையில் நேற்று மாலை 6 மணி வரை 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஆலந்தூர் மண்டலத்தில் 6.89 மெட்ரிக் டன், பெருங்குடி மண்டலத்தில் 6.03 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் 6,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பட்டாசு கழிவுகள் தரம்பிரிக்கப்பட்டு கும்மிடிபூண்டி, பெங்குடி, கொடுங்கயூர் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சனிக்கிழமை முதல் திங்கள் வரை நகரத்திலிருந்து மொத்தம் 210 டன் பட்டாசு கழிவுகளை சேகரித்தனர். சனிக்கிழமை 3.6 டன் மற்றும் மறுநாள் 53.7 டன் சேகரிக்கப்பட்ட நிலையில், திங்கட்கிழமை 152.2 டன் சேகரிக்கப்பட்டது. மாநகராட்சி தரவுகளின்படி, மொத்த பட்டாசு கழிவுகளில் சுமார் 51.6 டன் நகரின் வடக்குப் பகுதிகளிலிருந்தும், 64.25 டன் மத்திய மண்டலங்களிலிருந்தும், 94.3 டன் தெற்குப் பகுதியிலிருந்தும் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட பட்டாசு கழிவுகளின் மொத்த அளவு கடந்த ஆண்டு சேகரிக்கப்பட்ட அளவைப் போன்றது.
திங்கட்கிழமை வரை கும்மிடிப்பூண்டி அருகே உள்ள அபாயகரமான கழிவுகளை அகற்றும் நிலையத்திற்கு 100 டன் கழிவுகள் அனுப்பப்பட்டதாகவும், மீதமுள்ள கழிவுகள் செவ்வாய்க்கிழமை அனுப்பப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.