சென்னை,
டிடிவி தினகரன், சசிகலா குடும்பத்தினர் மீதான சோதனை இன்று 2வது நாளாக தொடர்ந்து வருகிறது. நேற்று 187 இடங்களில் நடைபெற்ற சோதனை இன்று 147 இடங்களில் தொடர்ந்து வருகிறது என்றும், இந்த சோனையின்போது, 60 போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டதாகவும் வருமான வரித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பல இடங்களில் நடைபெற்று பெரும் மெகா ரெய்டுக்கு, போலி நிறுவனங்கள் தொடங்கி, வரி ஏய்ப்பு செய்ததாக சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை புலனாய்வு இயக்குனர் கூறி உள்ளார். மேலும், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் அளித்துள்ளார்.
போலி நிறுவனங்கள் தொடங்கி வரி ஏய்ப்பு செய்ததாக சசிகலா, டி.டி.வி தினகரனின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்கள் போன்றோர் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
‘ஆபரேஷன் கிளீன் மணி’ என்று இந்த சோதனைக்கு பெயர் வைத்துள்ள வருமான வரித்துறை, நேற்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
1800 அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த மெகா வருமான வரி சோதனை சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மன்னார்குடி, புதுச்சேரி உள்பட 187 இடங்களில் நடைபெற்றது.
இந்த சோதனையின் வாயிலாக கைப்பற்றப்பட்ட ஆவனங்களின் படி 215 சொத்துகள், மற்றும் அதில் சம்பந்தப்பட்ட நபர்களும் விசாரைணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், அவர்களது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறி உள்ளனர்.
நேற்று நடைபெற்ற சோதனையின்போது, மேலும் 60 போலி நிறுவனங்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டதாகவும் ஆனால், அதன் விவரங்கள் குறித்து தற்போது தகவல்கள் தெரிவிக்க முடியாத என்றும், மேலும் 300க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.