அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைய இன்னும் 60 நாட்கள் கெடு அளித்திருப்பதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராகவும் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்த ஜெயலலிதா மறைந்த பிறகு அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுபட்டிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நடக்க, ஓ.பி.எஸ். தலைமையில் சில எம்.எல்.ஏக்கள் தனித்து இயங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி துவங்கியது. ஆனால் இதற்காக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழுவை கலைப்பதாக சில நாட்களுக்கு முன் ஓ.பி.எஸ். அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி. தினகரன், “இரு அணிகளும் இணைய வேண்டும் என்றால் நான் ஒதுங்கியிருக்க வேண்டும் என்றார்கள். ஆனால் இரு அணிகளும் இணைவது போல் தெரியவில்லை. ஜெயக்குமார் போன்றவர்கள் ஓ.பி.எஸ்ஸுக்காக கையெந்தி காத்திருக்கிறார்கள்.

இன்னும் அறுபது நாள் அவர்களுக்கு அவகாசம் அளிக்கிறேன். அதற்குள் இரு அணிகளும் இணையாவிட்டால், இணைப்பு முயற்சியில் நான் ஈடுபுடுவேன்” என்றார்.

மேலும் அவர், “கட்சி பொதுச் செயலாளர் சசிகலாவின் உத்தரவுக்கு அ.தி.மு.கவின் 122 எம்.எல்.ஏக்களும் கட்டுப்படுவார்கள். முதல்வர் எடப்பாடி தலைமையில் நடக்கும் இப்தார் விழாவுக்கு என்னை அழைத்தால் கலந்துகொள்வேன்” என்றும் தினகரன் தெரிவித்தார்.