சென்னை: 6ஆண்டு சம்பள பாக்கி உள்பட 30அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கூட்டுறவு வீட்டு வசதி சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படவில்லை,. நிலுவையில் வைக்கப்பட்டுள்ள சம்பளத்தைஉடனே வழங்க வலியுறுத்தியது உள்பட 30அம்ச கோரிக்கைகளை கூட்டுறவு வீட்டு வசதி சங்க பணியாளர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய சங்கத்தின் தலைவர் பி.செல்வராஜ் கூறியதாவது,
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கபணியாளர்களுக்கு கடந்த 6ஆண்டுகளுக்கு மேலாக சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில்உள்ளது. இதனால், பணியாளர்கள் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, நிலுவை சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வுகால நிதி பயன்களையும் வழங்க வேண்டும்.
கடனை செலுத்திய பிறகும், ஒப்படைக்காமல் வைத்துள்ள 5,100பத்திரங்களை திருப்பி தர வேண்டும். கடன் பெற்று 20 ஆண்டுகால கடன்காலம் முடிந்தவர்களுக்கு, ஒருமுறை கடன் தீர்வு (ஓடிஎஸ்) திட்டம் மூலம் கடனை திருப்பி செலுத்த வாய்ப்பு அளிக்க வேண்டும். இதற்காக ஓடிஎஸ் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
வீட்டு வசதி சங்கங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் சம்பளம் இல்லா பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும். வீட்டு வசதி துறைக்கு வழங்கப்பட வேண்டிய கலைஞர் கனவு இல்லம், முதல்வர் மருந்தகம் ஆகிய திட்டங்களை வீட்டு வசதி சங்கங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக அரசு துறை அதிகாரிகளிடம் கடந்த பல ஆண்டுகளாக முறையிட்டும் பயன்இல்லை. எங்களது கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யாவிட்டால் அடுத்தகட்டமாக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றார்.