கோவை:

மாலையில் கடைக்கு சென்ற சிறுமி காலையில் உடலில் ரத்தக்காயங்களுடன் சடலமாக கிடந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு  கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சிறுமி உடல் கிடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை

கோவையில் உள்ள  துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி, அருகிலுள்ள திப்பனூர் அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மாலை பள்ளி சென்று திரும்பிய அவரை,  தாயார் அருகிலுள்ள கடைக்கு பொருட்கள் வாங்க அனுப்பி யுள்ளார்.

கடைக்குப் போன சிறுமி நீண்ட நேரமாக திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உள்பட அக்கம் பக்கத்தினர், சிறுமியை தேடி அலைந்தனர்.  பல இடங்களில் இரவு முழுவதும்  தேடிப்பார்த்துள்ளனர்.

ஆனால், சிறுமி கிடைக்காத நிலையில், இன்று காலை அதே பகுதியிலுள்ள முட்டுச்சந்து ஒன்றில், சிறுமியின் முகத்தில் டிசர்ட்டால் மூடப்பட்  நிலையில் உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக கிடந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர் அலறியடித்து ஓடிவந்தனர். சிறுமியின் சடலத்தை கண்டவர்கள், அழுது புலம்பினர். தனது மகளை  மகளை யாரோ  மர்ம நபர்கள் பாலியல் வன்புணர்வு செய்து கொன்றிருக்கலாம் என கதறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.  சிறுமியின் மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சிறுமியின் சாவுக்கு  தங்களது  பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் மீது சந்தேகம் உள்ளதாகவும் அவரை விசாரித்து கைது செய்ய வேண்டும் என்றும் அதுவரை சடலத்தை வாங்க மாட்டோம் என்றும் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை சமாதானப்படுத்திய  காவல்துறையினர் சிறுமியின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், தடய அறிவியல் துறையினர் குழந்தை அருகே கிடைத்த பொருட்களை கொண்டு ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.