சென்னை

ன்று நடந்த திமுக எம் பிக்கள் கூட்டத்தில் ஆளுநர் பதவி அர்சியல் மயமாவதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாக அரங்கில் இன்று நடைபெற்ற திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் (மக்களவை-மாநிலங்களவை) கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவை பின்வருமாறு: –

ஆளுநருக்கு எதிராக தீர்மானம்:-

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஓர் அங்கம். ஆனால் அந்த அவையின் மரபை மதிக்கமாட்டார். சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போடுவார். மாநில அரசின் “Constitutional Head” ஆளுநர் . ஆனால் மாநில அரசின் ஆளுநர் உரையை படிக்கமாட்டார். தமிழ்த்தாய் வாழ்த்தை சிறுமைப்படுத்துவார். சமஸ்கிருதம் – இந்தி மொழி புகழ் பாடுவார்.

ஆளுநர் மாளிகையின் ஒட்டுமொத்த செலவும் மாநில அரசின்- அதாவது மாநிலத்து மக்களின் வரிப்பணம். ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு வழிகாட்ட வேண்டியவர் ஆளுநர் மாளிகையில் அமர்ந்து எதிர்கட்சித் தலைவர்போல் அரசியல் செய்வார். பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து துணைவேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகத்தை உருவாக்குவார். ஆனால் அதே பல்கலைக்கழகங்களில் பா.ஜ.க. அரசியல் பிரசங்கம் செய்வார். அக்கப்போர் அரசியல் மட்டுமே கவர்னரின் அஜெண்டாவாக இருக்கிறது.

“ஆளுநரை நியமிப்பதற்குப் பதில் ஏன் தேர்ந்தெடுக்க கூடாது’ என அரசியல் நிர்ணய சபையில் விவாதித்தபோது – அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர் அரசின் நிர்வாகத்தில் குறுக்கிடுவார். அப்படி அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவது ஜனநாயகத்தை அடிமைப்படுத்துவது போலாகிவிடும் என சட்ட அறிஞர்கள் குறிப்பிட்டனர். நியமிக்கப்பட்ட ஆளுநராக இருக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று அதைத்தான் அடாவடியாகச் செய்து கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியிலோ, தமிழ்நாட்டு மக்களின் நலனிலோ, தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்திலோ அவரே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அரசியல் சட்டத்திலோ நம்பிக்கை துளிகூட இல்லை. அவருக்கு இருக்கும் ஒரே ஆர்வம் வெகுஜன விரோத வலதுசாரி அரசியல் மட்டும் தான். அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

“அரசின் கொள்கை முடிவுகளை நிறைவேற்ற முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து துணை நிற்க வேண்டிய அரசியலுக்கு அப்பாற்பட்டவரை ஆளுநராக நியமிக்க வேண்டும்” என அரசியல் நிரணய சபை எதிர்பார்த்தது. ஆனால் ஆளுநர் ரவி நியமனத்தில் அது தவிடுபொடியாகிப் போனது என்பதை இந்த எம்.பி.க்கள் கூட்டம் மிகவும் வேதனையுடன் பதிவு செய்ய விரும்புகிறது.

டங்ஸ்டன் சுரங்கம்:-

மக்களின் துணையுடன் அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கடும் அழுத்தம் கொடுத்து மதுரை அரிட்டாப்பட்டியில் அமையவிருந்த டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை தடுத்து நிறுத்தி – மூன்றே மாதங்களில் கொடுத்த அனுமதியை மத்திய அரசே ரத்து செய்ய வைத்து வெற்றி வாகை சூடிய வணிகர்கள் உள்ளிட்ட போராடிய அனைத்து மக்களுக்கும், முதல்-அமைச்சருக்கும் இக்கூட்டம் நன்றியினையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. மாநில உரிமைகளை பாதுகாக்கும் திராவிட மாடல் அரசின் போராட்டத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி.

இரும்பு சாதனை:-

இரும்பின் தொன்மையை நாட்டுக்கு அறிவித்தல்” “இரும்பின் தொன்மை நூலை வெளியிடுதல்” “கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்” “கங்கை கொண்ட சோழபுரம் அருங்காட்சியகம்” ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல், “கீழடி இணையத் தளத்தை தொடங்கி வைத்தல்” என தமிழ் பண்பாட்டை உலகுக்கு எடுத்துச் செல்லும் “ஐம்பெரும் விழாவை” நடத்தி – “உருக்கு இரும்பு தொழில்நுட்பம் 5370 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது ” என்று உலகிற்கு அறிவித்து – தமிழ்நாட்டின் சிறப்பை வெளிப்படுத்தியுள்ளதோடு இந்தியாவின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்தே எழுதப்படும் சூழலை உருவாக்கியுள்ள திராவிட மாடல் அரசின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இக்கூட்டம் மனமார்ந்த பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் மண்ணின் இந்த கண்டுபிடிப்பை இந்திய தேசிய காங்கிரசின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பாராட்டியிருப்பதற்கு நன்றி தெரிவிக்கும் இக்கூட்டம் மத்திய அரசு சார்பில் தமிழ்நாடு அரசின் இந்த முயற்சியை முன்னெடுக்கவில்லை என்பதை வேதனையுடன் பதிவு செய்வதோடு, மத்திய அரசும், பிரதமர் அவர்களும் தமிழ்நாட்டின் தொன்மை பற்றிய இந்த நிகழ்வை முன்னெடுக்க வேண்டும் என இந்த எம்.பி.க்கள் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

யு.ஜி.சி. நெறிமுறை:-

மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை ஆளுநரே நியமிக்கும் அதிகாரத்தை வழங்கி பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 9.1.2025 அன்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி – மாநிலத்தின் கல்வி உரிமையை நிலைநாட்டியுள்ள முதல்-அமைச்சருக்கு இக்கூட்டம் பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது.

நீட் தேர்வு மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களின் மருத்துவக் கனவை சிதைத்து, பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியையும் பாழ்படுத்தி ஒன்றியத்தில் 5 ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க.வினரின் கொள்கைகளை மாநிலங்களிலும் கொண்டுவர மேற்கொள்ளப்படும் இந்த வரைவு நெறிமுறைகளையும், இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளில் கற்கை முறைகளுக்கு குறைந்தபட்ச வரைவு நெறிமுறைகள், 2024 மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியிட்ட வரைவு நெறிமுறைகள் 2025 ஆகியன தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் உள்ளதோடு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கோட்பாடான கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.

குறிப்பாக தமிழ்நாட்டின் உயர் கல்வி முறைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதால், இந்த வரைவு நெறிமுறைகளை திரும்ப பெறக்கோரி, கழகத் தலைவர் அறிவித்துள்ளதற்கு ஏற்ப கழக மாணவரணியின் சார்பில் 06.02.2025 அன்று போராட்டம் நடத்தப்படும் என்றும், கழக எம்.பி.க்கள் டெல்லியில் போராட்டம் நடத்துவார்கள் என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

வக்பு சட்ட திருத்த மசோதா:-

சிறுபான்மையினரின் நலனைப் பாதிக்கும் வக்பு சட்ட திருத்த மசோதா 2024-யை கொண்டு வந்து – நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிலும் முறைப்படி விவாதம் நடத்தாமல்- எதிர்கட்சி உறுப்பினர்களை எல்லாம் வெளியேற்றி ஆரோக்கியமான விவாதமே பாராளுமன்ற ஜனநாயகத்தின் அடிநாதம் என்பதை மறந்து – எதிர்கட்சிகள் அளித்த 44 திருத்தங்களையும் ஏற்காமல் அவசர அவசரமாக டெல்லித் தேர்தலை மனதில் வைத்து மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்ற துடிப்பதற்கு இந்த எம்.பி.க்கள் கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

இச்சட்டத் திருத்தம் மீண்டும் அவையில் கொண்டு வரப்படும்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக தலைவரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப தீவிரமாக எதிர்த்து வாக்களித்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

ரயில்வே திட்டங்கள்:-

மத்திய பா.ஜ.க. அரசின் நிதி நிலை அறிக்கைகளில் இதுவரை தமிழ்நாட்டிற்கு முத்திரைத் திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை. ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாடு அடியோடு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. நிதி ஒதுக்கீட்டிலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. நம் மாநிலம் நேரடி வரியாக மத்திய அரசுக்கு 100 ரூபாய் கொடுத்தால், நம் மாநிலத்திற்கு 29 ரூபாய் மட்டுமே திருப்பித் தரப்படுகிறது.

ஆனால் 100 ரூபாய் கொடுக்கும் பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலத்திற்கு 354 ரூபாயும், உத்தரபிரதேச மாநிலத்திற்கு 333 ரூபாயும், மத்திய பிரதேசத்திற்கு 279 ரூபாயும், மத்திய ஆட்சியை தக்க வைக்க உதவும் கூட்டணிக் கட்சி ஆளும் பீகார் மாநிலத்திற்கு 922 ரூபாயும் திருப்பி கொடுக்கிறார்கள் என்றால் தமிழ்நாடும்- தமிழ்நாடு மக்களும் நிதி ஒதுக்கீட்டில் எவ்வளவு மோசமாக வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

இதே நிலைதான் வருவாய் பகிர்வு மற்றும் மானியப் பகிர்வு அனைத்திலும் நீடிக்கிறது. தமிழ்நாடு அனைத்து வகை நிதி ஆதாரத்திலும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறது என்பதை இக்கூட்டம் வேதனையுடன் பதிவு செய்கிறது. கடந்த நிதி நிலை அறிக்கையை தமிழ்நாடு என்ற பெயரே இல்லாமல் தாக்கல் செய்த மத்திய பா.ஜ.க. அரசு இந்த முறை நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி, பேரிடர் நிதி உள்ளிட்டவற்றை ஒதுக்கீடு செய்யதிடவும், தமிழ்நாட்டிற்கு என்று முத்திரைத் திட்டங்கள் மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை அறிவித்திடவும் மத்திய பா.ஜ.க. அரசை இந்த கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.”

எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.