பாஜக பெண் நிர்வாகியின் கணவரை கொல்ல முயன்ற வழக்கில் 6 பேர் காவல்துறையில் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை முயற்சி நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.

பாஜக மகளிர் அணி மாநில பொதுச்செயலாளராக இருப்பவர் நதியா, 41 இவரது கணவர் சீனிவாசன் 45.

தற்போது அண்ணாநகர் தங்கம் காலனி 2வது தெருவில் வசித்து வரும் சீனிவாசன் நேற்று முன்தினம் மாலை சுமார் 4 மணியளவில் தங்கம் காலனி 6வது அவின்யூவில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பியோடிய சீனிவாசன் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வடபழனி 100 அடி சாலையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நொளம்பூர் காவல்நிலையத்தில் நேற்று அதிகாலை 6 பேர் சரணடைந்தனர்.

அவர்களை கைது செய்து திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கடந்த 2006ம் ஆண்டு சௌகார்பேட்டையில் மீன் நெடுஞ்செழியன் என்ற நபர் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

இந்த கொலை வழக்கில் சீனுவாசன் மற்றும் அவரது மாமனார் ராஜேந்திரன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அந்த கொலைக்கு பழிதீர்க்கவே சீனிவாசனை வெட்டியதாக சரணடைந்த 6 பேரில் ஒருவனான பிரசாந்த் வாக்குமூலம் அளித்துள்ளான்.

சரணடைந்த பிரசாந்த் 19 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட மீன் நெடுஞ்செழியனின் நெருங்கிய உறவினர் என்று கூறப்படுகிறது.

தற்போது மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்றுவரும் சீனிவாசனின் மனைவி நதியா சீனிவாசன் 2022 சென்னை மாநகராட்சி தேர்தலில் 109வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்டிருந்தார் என்பதும் இவர் ஏற்கனவே பால் கனகராஜ் தலைமையிலான தமிழ் மாநில கட்சியில் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.