சென்னை,
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள ஆறு நீதிபதிகள் இன்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானார்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை ஐகோர்ட்டில் மொத்தம் 75 நீதிபதிகள் பணியாற்ற வேண்டும். ஆனால், தற்போது 54 நீதிபதிகளே பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமான வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளது.
இதன் காரணமாக மேலும் நீதிபதிகளை நியமிக்க, தமிழக மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றி வந்த நீதிபதிகளை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட 15 பேரில் 6 பேரை கொலிஜியம் தேர்வு செய்து அறிவித்தது.
அதன்படி, மாவட்ட நீதிபதிகள் பணியிடத்தில் இருந்துவரும் ஆறு பேர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்து மத்திய சட்டத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி எஸ். ரமாதிலகம், ஆர். தரணி, ஆர். ராஜமாணிக்கம், டி. கிருஷ்ணவள்ளி, பொங்கியப்பன், ஹேமலதா ஆகிய ஆறு பேரை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்தது.
புதிதாக நியமிக்கப்பட்ட 6 நீதிபதிகளுக்கும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இன்று காலை பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இதன் காரணமாக சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 15 நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன.