சென்னை:

சென்னை  மெரினா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக 6 மாதங்களுக்குள் மாற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், விதிகளை மீறுவோரை கட்டாயப்படுத்தி அகற்றவும் உத்தரவிட்டு உள்ளது.

ஆசியாவின் 2வது பெரிய கடற்கரையான மெரினா கடற்கரைக்கு தினசரி நூறுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். விடுமுறை தினங்களில் ஆயிரக்கணக்கிலும், விசேஷ விடுமுறை தினங்களில் லட்சகணக்கானோரும் மெரினாவில் குவிந்து வருவது வழக்கம். இதனால் மெரினா கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில்,  சென்னை உயர்நீதி மன்றம் பல முறை தமிழகஅரசையும், சென்னை மாநகராட்சியையும் எச்சரித்து உள்ளது.

அதுபோல மெரினா கடற்கரை சாலையை மீன் வியாபாரிகள் ஆக்கிரமித்துக்கொண்டு, அந்த இடத்தை அசுத்தம் செய்வதுவருவதை தடுக்க கோரியும் பொதுநல வழக்கு ஏற்கனவே தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ் குமார் அமர்வு, மெரினா கடற்கரையை 6 மாதத்திற்குள் உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என்று எச்சரித்த நீதிபதிகள், மெரினாவை சுத்தமாக வைப்பது குறித்து டிசம்பர் 13ம் தேதிக்குள் பதில் தர வேண்டும் என மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும், கடற்கரையில் உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத கடைகளை அகற்றவும், விதிகளை மீறுவோரை கட்டாயப்படுத்தி அகற்றவும்  நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.