பாங்காக்: தாய்லாந்து நாட்டில் அருவி நீரில் மூழ்கிய குட்டி யானை ஒன்றை பாசத்தோடு காப்பாற்றச் ச‍ென்ற 6 பெரிய யானைகள் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.

பொதுவாகவே, விலங்குகளில் யானைகள் பாசத்திற்கு பெயர்போனவை என்று கூறப்படுவதுண்டு. அவற்றின் வாழ்க்கைமுறை அமைப்பே அதற்கு சாட்சி. அவை கூட்டமாக வாழும்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகே கவோ யாய் என்ற தேசிய வனவிலங்கு பூங்கா உள்ளது. தலைநகர் அருகே உள்ளதால், இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை மிக அதிகம். இந்தப் பூங்காப் பகுதியில் ஹயேவ் நரோக் என்ற நீர்வீழ்ச்சியும் உண்டு.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, இந்த நீர்வீழ்ச்சியின் மேல்பகுதியில் இரண்டு யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டது. எனவே, அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர் பூங்கா ஊழியர்கள். அப்போது குட்டி யானை ஒன்று அருவியில் மூழ்கி கிடந்ததும், அதை மீட்பதற்கு இந்த 2 யானைகளும் முயற்சிப்பது தெரியவந்தது.

எனவே, அந்த இரண்டு யானைகளையும் பூங்கா ஊழியர்கள் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அதன்பிறகுதான் அவர்களுக்கு இன்னொரு அதிர்ச்சி கிடைத்தது.

நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு மீண்டும் வந்து அவர்கள் பார்த்தபோது, சற்று தள்ளி மொத்தம் 6 யானைகள் நீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. குட்டியைக் காப்பாற்றுவதற்காக சென்றதால், அந்த 6 யானைகளும் வழுக்கி, அடிபட்டு, நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. யானைகளின் பாசத்திற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணமாய் அமைந்துவிட்டது.