சேலம்: சேலம் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, தமிழர்களின் தொன்மையை அழிக்கவும், மறைக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறது என குற்றம் சாட்டினார்.
மேலும்,டெல்லிக்கு தலையாட்டி பொம்மையாக அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்றும் அவரையும் சாடினார். மேலும், சேலத்துக்கு 6 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை சேலம் சென்ற முதல்வர், இரவு மேட்டூர் விருந்தினர் விடுதியில் தங்கி ஓய்வெடுத்தார். இன்று காலை மேட்டூர் அணையை பாசனத்திற்கு திறந்து வைத்தவர்,. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சேலத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைப்பவர் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி என அவரை பாராட்டியதுடன், தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் ஆட்சியர்களில் ஒருவர் என்று புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசியவர், சேலத்திற்கு தி.மு.க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது என்று கூறியதுடன் சேலத்தில் 9 உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன அதுமட்டுமின்றி, சேலத்தில் ரூ.548 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் சேலத்திற்கு ரூ.7600 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டவர், சேலம் மாவட்டத்தில் மட்டும 56 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரைக்கு வந்தபோது தி.மு.க. ஆட்சியில் குறை சொல்லி ஆத்திரத்தை கொட்டித் தீர்த்துள்ளதாக விமர்சித்தவர், 10 ஆண்டுகளுக்கு முன் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலை என்ன? என்று எதிர்கேள்வி எழுப்பியதுடன், 2 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடித்திருக்கலாம். ஆனால், இன்னும் கட்டப்படவில்லை, எய்ம்ஸ் மருத்துவமனையை பத்தாண்டுகளாக கட்டுவதற்கு அது மருத்துவமனையா அல்லது விண்வெளி ஆராய்ச்சி நிலையமா?

மதுரை வந்த அமித்ஷா எய்ம்ஸ் நிலை குறித்து நேரில் போய் பார்த்தாரா? என கூறியவர், பிரதமர் பெயரில் உள்ள திட்டங்களுக்கே மாநில அரசு தான் கூடுதல் நிதி கொடுக்கிறது. 11 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு அளித்த சிறப்பு திட்டம் என்ன? மத்திய அரசின் எந்த திட்டங்களுக்கும் முழு நிதி மாநில அரசுக்கு வந்து சேர்வதில்லை என்று விமர்சித்தவர், சட்டையில் இருந்தால் தான் அகப்பையில் வரும்… எனவே எந்த சாதனையையும் மத்திய அரசால் சொல்ல முடியவில்லை.
மதுரையின் தொன்மையை நிராகரிக்கும் வகையில் பேசியிருக்கிறார் மத்திய அமைச்சர் ஒருவர். ஏராளமான தரவுகளுடன் கொடுக்கப்பட்ட கீழடி ஆய்வறிக்கையை திருத்த வேண்டும் என்று மத்திய அரசு சொல்கிறது. கீழடி அறிவியல் ஆய்வில் எழுதப்பட்ட அறிக்கையை போதவில்லை என கூறுகிறார் மத்திய அமைச்சர் செகாவத்.
தமிழர்களின் தொன்மையை அழிக்கவும், மறைக்கவும் மத்திய அரசு முயற்சிக்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோன போது எடப்பாடி பழனிசாமி வாய் திறந்து கேள்வி கேட்டாரா? * டெல்லிக்கு தலையாட்டி பொம்மையாக அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்றார்.

இதையடுத்து, சேலம் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிடுவதாக கூறிய முதல்வர்,
- சேலத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் சாலைகள் சீரமைக்கப்படும்.
- சேலம் செவ்வாப்பேட்டை தினசரி சந்தை ரூ.9 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
- சங்ககிரி நகராட்சியில் புதிய வணிக வளாகம் கட்டப்படும்.
- மேட்டூர் நரசிங்கபுரத்தில் புதிய நகராட்சி கட்டடங்கள் கட்டப்படும்.
- ஆத்தூரில் ரூ.5 கோடியில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். அத்துடன் தாரமங்கலம், எடப்பாடி, ஆத்தூர் பகுதிகளில் புதிய குடிநீர்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
- தலைவாசல் இழுப்பநத்தம் வேளாண் விற்பனை மையம் ரூ.10 கோடியில் தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார்,.
இவ்வாறு அவர் கூறினார்.