சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 1,857 கி. மீ., நீளமுள்ள, 10,628 சாலைகள், சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள, 1,230 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை, ஆறு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஒரு ஆண்டிற்குள் 5வது முறையாக சாலை பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாநகராட்சியில் நிர்வாகத்தின் கீழ் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5,270 கி.மீ. நீளமுள்ள 34 ஆயிரத்து 640 உட்புற சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. , இதில் பெரும்பாலான சாலைகள், சாதாரண மழைக்கே தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி வருகின்றன. இதற்கு காரணமாக, சென்னை வளர்ச்சி என்றும், சென்னையில், சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், மெட்ரோ ரயில் நிறுவன பணிகள், மின்வாரியம், குடிநீர் வாரியம், மாநகராட்சி பணிகளால், அவ்வப்போது சாலைகளை தோண்டப்படுவதடன், அதை முறையாக மூடப்பட்ட நிலையே தொடர்ந்து வருகிறது.
இதனால், சென்னை மாநகராட்சி அவ்வப்போது கோடிக்கணக்கில் பணத்தை ஒதுக்கி, சாலையை மேம்படுத்தி வருவதாக கூறி வருகிறது. சேதமடைந்த சாலைகள் குறித்து கணக்கெடுத்து, அவற்றை சீரமைக்கும் பணியில், மாநகராட்சி அவ்வப்போது கோடிக்கணக்கில் பணத்தை ஒதுக்கீடு செய்து சீரமைத்து வருவதாக கூறி வருகிறது. இருந்தாலும், தரமற்ற சாலைகளால், சென்னை சாலைகள் எப்போதும்போலவே சிறு மழைக்கே தாக்குபிடிக்க முடியாமல் சேதமடைந்துவிடுகிறது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.பல சாலைகள் சேறும், சகதியுமாக காணப்படுகின்றன. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர்கள் விபத்தில் சிக்கி, பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
இந்த நிலையில், தற்போது, சென்னை மாநகராட்சி மீண்டும் சாலை சீரமைப்புப் பணிகளுக்காக ரூ. 1,230 கோடி ரூபாய் ஒதுக்கீடு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சி கடந்த ஒரு ஆண்டில் மட்டும், (2022 நவம்பர் முதல் 2023 செப்டம்பர் வரை) சுமார் ரூ.1600 கோடி மதிப்பில் சாலைகள் சீரமைப்பு பணிகளுக்காக ஒதுக்கீடு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு (2022) நவம்பரில் பெய்த அதீத கனமழையால் 1,000-க்கும் மேற்பட்ட சாலைகள் சேதமடைந்தன. அவற்றை சீரமைக்க, தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டம், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றதாக கூறப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீடு தொடர்பாக 2022ம் ஆண்டு செப்டம்பர் 23அன்று அறிவிக்கப்பட்டது.
பின்னர், 2023 பிப்ரவரி மாதம் இறுதியில், சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.91 கோடியில் 930 சாலைகளை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, . முதல்கட்டமாக 362 சாலைகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வில் ரூ.1171 கோடியில்1860 கிமீ நீள சாலைகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குஅரசும் நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ரூ.91 கோடியில் 930 சாலைகளை சீரமைக்க திட்டமிட்டுள்ளது என கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்த பிப்ரவரி 27ந்தேதி அன்று, சிங்காரசென்னை 2.0 திட்ட நிதியில் ரூ.41கோடியே 65 லட்சத்தில், 362சாலைகளை 62 கிமீ நீளத்துக்கு அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டு, தகுதியான ஒப்பந்ததாரரை இறுதிசெய்து, பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் (பிப்.27) தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டது.
அதன்பிறகு, நடப்பாண்டு (2023) மார்ச் 27ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட மாநகராட்சி பட்ஜெட்டில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 452 பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் 78.01 கி.மீ., நீளத்திற்கு 55.61 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படும் என்றும், சென்னையின் முக்கிய பகுதிகளில் 232 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள். மழைநீர் வடிகால்கள் 55 கோடி ரூபாய் மதிப்பில் துார்வாரும் பணி நடைபெறும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் சேதமடைந்த நிலையில் உள்ள சாலைகளை சீரமைப்பதற்காக 1,230 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மழை மற்றும் பல்வேறு சேவைப் பணிகளால், 10,628 சாலைகள் சேதமடைந்த நிலையில், 1,230 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி தீவிரப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து கூறிய மாநகராட்சி அதிகாரிகள், சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 1,857 கி.மீ., நீளமுள்ள, 10,628 சாலைகள் சேதமைந்துள்ளன. இந்த சாலைகளை , சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள, 1,230 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளனர். மேலும். இப்பணிகளை, ஆறு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழைக்காலம் இந்த மாதம் (அக்டோபர்) தொடங்கி டிசம்பர் மாதம் வரை தொடரும், இந்த காலக்கட்டத்தில் மழைபெய்ய வாய்ப்புள்ளது. இப்பருவமழை காலங்களில் பெய்யக்கூடிய கனமழையினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட தமிழ்நாடு அரசு, சென்னை மாநகராட்சி ஆலோசனை நடத்தி உள்ளது.
ஆனால், இந்த மழைக்காலத்தில், சாலைகளை சீரமைக்க வேண்டும் என கோடிக்கணக்கில் பணத்தை ஒதுக்கி இருப்பதும் வேடிக்கையாகவே உள்ளது.
சென்னையில் பகலில் போக்குவரத்து நெரிசல் காணப்படும் என்பதில், பெரும்பாலான பகுதிகளில் இரவு நேரங்களில்தான் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. அதுவும் மழை பெய்தாலும், ஒப்பதாரர்கள் பணிகளை மேற்கொண்டு வருவதால், போடப்படும் சாலைகள், ஓரிரு நாளில்மீண்டும் சேதம் அடைந்து வருகிறது. ஆனால், இதை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல், இந்த மழைக்காலத்தில் சாலை சீரமைப்பு பணிகளை செய்யப்போவதாக அறிவித்துள்ளது, மக்கள் பணத்தை வீணடிக்கும் நோக்கம் என்றும், இதனால், ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால், அதிகாரிகளோ, மழைக் காலங்களில் பொதுமக்கள் பாதிக்காத வகையில், சேதமடைந்துள்ள சாலைகள் மற்றும் பேருந்து மற்றும் உட்புறச் சாலைகளை சீரமைக்கவும், நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்து வருகின்றனர்.
சாலை பராமரிப்பு குறித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சி காலத்தில், அதாவத 2014ல் சாலைகள் குறித்து புதிய பராமரிப்பு ஒப்பந்தம் கொண்டு வந்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள், வெளிநாடுகளைப் போல முறையான பராமரிப்பு செய்யப்படும் வகையில், புதிய ஒப்பந்த வழிமுறைகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இத்திட்டத்தின்படி, சாலையை சீரமைத்து, ஐந்து ஆண்டுகளுக்கு முறையாக பராமரிக்க வேண்டும். அவ்வப்போது தேவைப்படும் மேம்பாட்டு பணிகளையும் சாலைகளில் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், இந்த விதிமுறைகளை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் முறையாக கடைபிடிக்காமல் இருந்து வருவதாலும், மக்கள் ‘பணத்தை கொள்ளையடிப்பதில் ஆர்வம் காட்டுவதாலும், அவ்வப்போது சாலை பராமரிப்பு என்ற பெயரில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வீணடிக்கப்பட்டு வருகிறது.
நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள் 5 ஆண்டுகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்று விதி இருக்கும்போது, அதை நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரிகள், அதை கண்டுகொள்வது இல்லை. சாலை பராமரிப்பு பணிகளை ப்பந்ததாரர்கள் முறையாக செய்வதில்லை. இதை கண்காணிக்க வேண்டிய அரசு அதிகாரிகளும், மாநிலஅரசுளு கண்காணிப்பது இல்லை. இதனால் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு வரும் சாலைகள் சில மாதங்களிலேயே பெயர்ந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்று, சின்னாபின்னமாகி விடுகின்றன.
இதை காரணம் காட்டி, ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், தங்களது வருமானத்துக்காக மீண்டும் மீண்டும் சாலை பணிகளை செப்பனிட, மக்களிடம் இருந்து அடாவடி செய்து வசூலிக்கப்படும் வரிப்பணத்தில், கோடி கணக்கில் ஒதுக்கீடு செய்வதும், அதைக்கொண்டு சாலை மீண்டும் செப்பனிடப்படுவதாக கூறிவருவதும் தொடர்கதையாகி வருகின்றன.
மொத்தத்தில் மக்கள் பணத்தை சுவாகா செய்வதில், அதிமுக அரசும் திமுக அரசும் இரட்டை குழல் துப்பாக்கி என்பது நிரூபணமாகி வருகிறது.