5G தொழில்நுட்பம் காரணமாக உலக உயிரினங்களுக்கு ஆபத்து, பறவையினங்கள் இதனால் அழியும், கொரோனா பரவல் இதனால் அதிகரிக்கிறது என்பது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆனால், விமானங்கள் பறக்கும் உயரத்தை கணக்கிடும் அல்டி மீட்டர் செயல்படும் அலைவரிசையை குறுக்கிடும் விதமாக 5G தொழில்நுட்ப அலைவரிசை உள்ளதால் இது விமானங்கள் இயக்குவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று அமெரிக்க விமான போக்குவரத்து நிறுவனங்களின் கூட்டமைப்பு ஆதாரபூர்வமாக கூறியுள்ளது.

5G மொபைல் இன்டர்நெட் தொழில்நுட்பத்தை இன்னும் ஓரிரு நாளில் வெரிசோன் மற்றும் AT&T ஆகிய நிறுவனங்கள் அமெரிக்காவில் அறிமுகப்படுத்த உள்ளன.

இந்நிலையில், திங்களன்று போக்குவரத்து செயலாளர் பீட் புட்டிகீக்-கிற்கு எழுதிய கடிதத்தில், 5G திட்டங்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இடையூறு ஏற்படுத்தும் என்று விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

5G இன்டர்நெட் சேவை சி-பேண்ட் அதிர்வெண்களைப் பயன்படுத்துகிறது, அவை விமானத்தின் உயரத்தை அளவிடுவதற்கு பயன்படுத்தும் அதிர்வெண் பகுதிக்கு அருகில் உள்ளது. அதனால் இது விமான தொழில்நுட்ப கருவிகளில் குறுக்கிடக்கூடுவதோடு பாதுகாப்பு ஆபத்தை உருவாக்கும் என்று விமான நிறுவனங்கள் கூறியுள்ளன.

விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள 5G டிரான்ஸ்மிட்டர்களுக்கான மின்சாரத்தை குறைப்பதன் மூலம் இந்த ஆபத்து குறிப்பிட்ட அளவு தவிர்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளன.