சென்னை: சென்னை  மாநகராட்சி தேர்தலுக்கு 5,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதுகுறித்த  விவரங்களை அறிய இணையதளம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் பொதுமக்கள் தங்களது வாக்குச்சாவடி எங்குள்ளது என்பதை, இணையதளம் சென்று, வாக்காளர் அடையாள அட்டையினை பயன்படுத்தி தெரிந்துகொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்  வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. மேலும், முறைகேடுகளை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளும் துரிதப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற உள்ள 200 வார்டுகளுக்கான மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குச்சாடிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 ஆயிரத்து 794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதில்,  ஆண் வாக்காளர்களுக்காக 255 வாக்குச்சாவடிகள், பெண் வாக்காளர்களுக்காக 255 வாக்குச்சாவடிகள், அனைத்து வாக்காளர்களுக்காக 5 ஆயிரத்து 284 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 5 ஆயிரத்து 794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாடி எங்குள்ளது என்பதை அறிந்துகொள்ள இணையதளமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக  http://election.chennaicorporation.gov.in என்ற ‘நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்-2022’ இணையதளத்தில், Know your Zone and Division என்ற இணைப்பில் மண்டலங்கள், வார்டுகளின் அமைவிடங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், Know your Polling Station என்ற இணைப்பை கிளிக் செய்தால் மாநகராட்சியின் 200 வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடிகளின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளத்தில் பொதுமக்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்தால், வாக்காளர் பெயர், உள்ளாட்சி அமைப்பு, வார்டு எண், தெருவின் பெயர், வாக்குச்சாவடி விவரம், வாக்காளர் பட்டியலின் பாகம் எண், வரிசை எண் குறித்த விவரங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.