டெல்லி: இந்தியாவில் 24மணி நேரத்தில் 564 பேருக்கு உறுதியாகி உள்ள நிலையில், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் இதுவரை 3955 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், மாநில அரசுகள் தயாராக இருக்க மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், மருந்து மாத்திரைகள், வேண்டிலேட்டர்கள் போன்றவை தேவையான அளவு தயாராக வைத்திருக்கவும், சுவாச பிரச்சினை உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரனோ பெருந்தொற்று 2019 ஆம் ஆண்டு முதல் சுமார் 3 ஆண்டுகளுக்கு நாட்டையே நிலைகுலையச் செய்தது. லட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் உயிரிழந்தனர். இந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வந்தது. தற்போது இந்தியாவிலும் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது.
குறிப்பாக, கேரள மாநிலம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலத்தில் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இருப்பினும், தற்போது பரவி வருவது வீரியமில்லாத கொரோனா தொற்று என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் நாடு முழுவதும் 4,866 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 3955 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர்.