சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயிலில் கடந்த  ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 56.66 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயிலுக்கு ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. சென்னை விமான நிலையம் – விம்கோ நகர் பணிமனை, பரங்கிமலை – சென்னை சென்ட்ரல் ஆகிய இரு வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த இரண்டு வழித்தடங்களை மேலும் விரிவுப்படுத்தவும் இப்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாளொன்றுக்கு சராசரியாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே, கொரோனா காலக்கட்டத்தில் மெட்ரோ ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது.

இந்த நிலையில், : சென்னை மெட்ரோ ரயிலில் ஆகஸ்ட் மாதத்தில் 56.66 லட்சம் பேர் பயணித்துள்ளனர். அதிகபட்சமாக கடந்த 29-ம் தேதி 2,20,898 பேர் ஒரே நாளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஜூலை மாதத்தை காட்டிலும் ஆகஸ்ட் மாதத்தில் 3,42,572 பேர் அதிகமாக பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் 2020-21-ம் நிதியாண்டில் ரூ.30.08 கோடியும், 2021-22-ம் நிதியாண்டில் ரூ.85.34 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு கடந்த மூன்று நிதியாண்டுகளில் ஒட்டுமொத்தமாக ரூ.278.92 கோடி வருவாயை சென்னை மெட்ரோ நிர்வாகம் ஈட்டியுள்ளது.

இந்த நிலையில், மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையிலும், வருமானத்தை பெருக்கவும் சென்னை மெட்ரோ நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.