ரூ.55 கோடி மோசடி: எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா மீது சிபிஐ வழக்கு

Must read

 

றைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமியின் வளர்ப்பு மகனும், செட்டிநாடு நிலக்கரி நிறுவன தலைவருமான எம்.ஏ.எம். ஆர். முத்தையா மீது ரூ.55 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிந்துள்ளது.

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் செட்டிநாடு சர்வதேச நிலக்கரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா. இவர் செட்டிநாடு குழுமங்களின் தலைவர் மறைந்த எம்.ஏ.எம்.ராமசாமியின் வளர்ப்பு மகன். .

செட்டிநாடு சர்வதேச நிலக்கரி நிறுவனம், வெளிநாடுகளில் இருந்து சென்னை எண்ணூர் துறைமுகம் வழியாக நிலக்கரி இறக்குமதி செய்து வருகிறது.  இப்படி இற்ககுமதி செய்யும்போது,  துறைமுகத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், செட்டிநாடு நிலக்கரி நிறுவனம், 2010-ம் ஆண்டு செப்டம்பர் 10 முதல் 2014-ம் ஆண்டு பிப்ரவரி வரை எண்ணூர் துறைமுகத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.47.65 கோடியை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்திருக்கிறது. இதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இந்த பிரச்சினை குறித்து துறைமுக தீர்ப்பாயத்தில் 2012 நவம்பர் 14 முதல் 2014 ஏப்ரல் 5-ம் தேதி வரை 19 முறை கூடி விசாரணை நடத்தப்பட்டது. முடிவில் ரூ.47.65 கோடியும் அதற்கான வட்டித் தொகையாக ரூ.8.04 கோடியும் சேர்த்து மொத்தம் ரூ.55.69 கோடி செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்தத் தொகையை செலுத்தச் சொல்லி செட்டிநாடு சர்வதேச நிலக்கரி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  ஆனால், கட்டணத்தை அந்நிறுவனம் செலுத்தவில்லை.

இதுகுறித்து எண்ணூர் துறை முக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பணத்தை செலுத்தாமல் இருக்க துறைமுகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் செட்டிநாடு நிலக்கரி நிறுவனத்துக்கு சட்டத்துக்குப் புறம்பாக உதவுவது தெரியவந்தது.  இதையடுத்து எண்ணூர் துறைமுக அதிகாரிகள் சிபிஐ லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார் செய்தனர்.

இதையடுத்து சிபிஐ போலீஸார் நடத்திய விசாரணையில், எண்ணூர் துறைமுகத்தின் கார்ப்பரேட் பிரிவு பொதுமேலாளர் சஞ்சய்குமார், நிதிப்பிரிவு பொது மேலாளர் எம்.குணசேகரன் ஆகியோர் செட்டிநாடு நிலக்கரி நிறுவனத்துக்கு சட்டத்துக்குப் புறம்பாக உதவி செய்திருப்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து துறைமுக அதிகாரிகள் சஞ்சய்குமார், எம்.குணசேகரன், எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா ஆகியோர் மீது சிபிஐ போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில், “‘செட்டிநாடு சர்வதேச நிலக்கரி நிறுவனத்தின் பங்குதாரராக மட்டுமே எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா இருக்கிறார். தேவையின்றி  அவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது’ என்று செட்டிநாடு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

More articles

Latest article