செங்கல்பட்டு: பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் மழை பெய்து வருவதால் அங்குள்ள பக்கிங்காம் கால்வாயிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பாலாற்றில் குளிக்கவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 பொதுப்பணித்துறை ஏரிகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 513 ஏரிகள் நிரம்பின. இதில் 220 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. அனுமந்தபுரத்தில் உள்ள கொப்பளான் ஏரியின் மதகு உடைந்ததால் நீர் முழுவதும் விவசாய நிலங்களில் புகுந்தது. இந்த நிலையில், பலத்த மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் ஆற்றில் இறங்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் கீழ்பாலாறு வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், பாலாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட உள்ளாவூர் பழைய சீவம் அணைக்கட்டில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் மற்றும் வாயலூர் தடுப்பணையில் இருந்து 40 ஆயிரம் கனஅடி நீர் வழிந்தோடுகிறது. மேலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பாலாற்றில் கூடுதலாக தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக பாலாற்றின் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.
எனவே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வருவாய்த்துறை, காவல் துறை மற்றும் பொதுப்பணித்துறையுடன் இணைந்து பாலாற்றின் கரையோரம் உள்ள கிராமங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம். மேலும் செல்போன் மூலம் புகைப்படம் எடுப்பது, செல்பி எடுப்பது போன்றவற்றை செய்யக்கூடாது. கால்நடைகளான ஆடு, மாடு போன்றவற்றை பாலாற்றில் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம்.
வீட்டில் உள்ள சிறுவர்-சிறுமியர்களை ஆற்றின் அருகில் செல்லாமல் இருக்க பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கல்பாக்கம் அடுத்த வாயலூர் பாலாற்று பகுதியில் தற்போது வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் கடலை நோக்கி பாய்ந்து வருகிறது. மேலும் இன்று காலை முதலே மழையும் பெய்து வருவதால், நீர்வரத்து இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்து உள்ளனர். கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் மழை பெய்து வருவதால் அங்குள்ள பக்கிங்காம் கால்வாயிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள அபாயம் காரணமாக வருவாய் துறையினர் மற்றும் போலீசார் கூடுதலாக கண்காணித்து, கரையோர பகுதியில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் பெய்த மழை காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலாறு பாலம் சேதமடைந்தது. பின்னர் அது சரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.