சென்னை,
ஆர்.கே.நகரில் 5,117 போலி வாக்காளர்கள் உள்ளதாக திமுக மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கில் வரும் திங்கட்கிழமை பதில் தர, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே நகரில் திமுக வழக்கு காரணமாக ஏற்கனவே 45 ஆயிரம் பேர் நீக்கப்பட்ட நிலையில் மேலும் 5 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளதாக திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில், திமுக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம் சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக சார்பில் வாதாடிய வக்கீல் வில்சன், ஆர்.கே நகர் தொகுதியில் மேலும் 5 ஆயிரத்து 117 போலி வாக்காளர்களை நீக்கவில்லை, அவர்களையும் நீக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி முறையிட்டார்.
அப்போது தேர்தல் கமிஷன் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், 2 முறை பதிவான 2,845 பேர் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிதார் மேலும், தற்போது தேர்தல அறிவிப்பு வெளியாகி, தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதால், தற்போது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறியது.
இதையடுத்து, வரும் திங்கட்கிழமை தேர்தல் கமிஷன் விரிவான பதில் தாக்கல் செய்யுமாறு வழக்கை ஒத்தி வைத்தது.