சென்னை: கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 511 மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ள அதிர்ச்சி தகவலை பள்ளிக்கல்வித்துறை  வெளியிட்டுள்ளது. மேலும்,  அவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அந்த காலக்கட்டத்தில், கடந்த 2020, 21ம் ஆண்டு, நாடு முழுவதும் குழந்தை திருமணம் அதிகரித்தது. மேலும், தமிழ்நாட்டிலும் சில மாவட்டங்களில் குழந்தை திருமணம்  அதிகரித்து வருவதாக குழந்தைகள் (CHILD RIGHTS AND YOU – CRY) என்ற அமைப்பு கடந்த 2021ம் ஆண்டு மே மாதம், குழந்தை திருமணங்கள் குறித்த புள்ளி விவரத்தை வெளியிட்டிருந்தது.

அதில்,  சேலம், தர்மபுரி, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டம் மற்றும்,  பழங்குடி மக்கள் வாழ்விட பகுதிகளான 71 இடங்களில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடந்துள்ளதாக தெரிவித்திருந்ததுடன்,.  2020 மே மாதத்தில் தமிழகத்தில் 318 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. 2020 மே மாத புள்ளி விவரங்களின் படி சேலத்தில் 98 திருமணங்களும், தர்மபுரியில் 192 திருமணங்களும் நடந்துள்ளன என்று கூறியதுடன், இந்த அச்சம் இன்னும் அதிகரிக்கும் என்றும் கிரை (CRY) தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள தகவலில், தமிழ்நாட்டில் மட்டும் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இடைநிற்றல் மாணவிகள் குறித்து ஆசிரியர்கள் எடுத்த கணக்கெடுப்பில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.  மாணவிகள் திருமணத்தைப் பொருத்தவரை எட்டாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோர் திருமணம் நடத்திவைத்துள்ளனர்.

அதன்படி,  கொரோனா காலகட்டத்தில் 8-ம் வகுப்பு மாணவியர் 10 பேருக்கும், 9-ம் வகுப்பு மாணவியர் 37 பேருக்கும், 10-ம் வகுப்பு மாணவியர் 45 பேருக்கும், 11-ம் வகுப்பு மாணவியர் 417 பேருக்கும், 12-ம் வகுப்பு மாணவியர் 2 பேருக்கும் என்று 511 பேருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது என ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

திருமணமான் பின் இடைநின்ற மாணவியர் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கவும், அவர்கள் படிப்பை தொடரவும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள் பள்ளியில் இடை நின்றிருந்தால் அவர்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.