டில்லி,

ந்தியத்தன்மையை முன்னிறுத்தும் கல்வியை மாணவர்களுக்குத் தரவேண்டும் என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆர் எஸ் எஸ் சார்பில் கல்வி தொடர்பாக இரண்டுநாள் கருத்தரங்கம் நடை பெற்றது. இந்த மாநாட்டில் நாட்டில் உள்ள  முக்கிய பல்கலைக்கழகங்களிலிருந்து 21 துணைவேந்தர்கள் பங்கேற்றனர். வரலாற்று ஆய்வாளர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட கல்வியாளர்களும் கலந்துகொண்டனர்.

அதில்பேசிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன்பாகவத்,  பாரதநாட்டின் கலாச்சாரம், பண்பாடுகளை எதிரொலிக்கும் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.  முன்னதாக பிரஞ்சா-பிரவாஹா என்ற அமைப்பின் தலைவரான நந்தக்குமார் பேசுகையில், டாக்டர் ராதாகிருஷ்ணன் காலத்திலிருந்து கோத்தாரி கமிஷன் வரை ஏராளமான கல்வித்திட்ட அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

அனைத்துமே இந்தியத் தன்மை இல்லாமல் மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பவையாகவே இருந்ததாக  குற்றஞ்சாட்டினார். இந்தியக் கலாசாரத்தை தூக்கிநிறுத்தும் கல்வித்திட்டத்தை தருவிப்பது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த மாநாட்டில் கல்வியாளர்கள் மட்டுமல்லாது இந்துத்துவ கல்விச் சிந்தனையாளர்களும் கலந்து கொண்டு கருத்துகளைப் பதிவு செய்தனர்.