டில்லி,

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, 10% அளவுக்கு ஆட்குறைப்பு செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளது.

இதன் காரணமாக சுமார் 27 ஆயிரம் பேருக்கு வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து,  பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் ரஜ்னிஷ் குமார் கூறியதாவது

ரஜ்னிஷ்குமார்

பாரத ஸ்டேட் வங்கியில் தற்போது 2 லட்சத்து 7 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். ஏப்ரல் 1 முதல்  பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளான  ஸ்டேட் பாங்க் மைசூர், ஸ்டேட பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் போன்ற வங்கிகள் இணைக்கப்பட உள்ளது. இந்த வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்கள் சுமார்  70 ஆயிரம் பேர் ஏப்ரல் 1ம் தேதி முதல் பாரத ஸ்டேட் வங்கியுடன்  இணைகின்றனர்.

இதன் காரணமாக, பணியாளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 77 ஆயிரமாக உயரும். இதன் காரணமாக சுமார் 10 சதவிகித பணியாளர்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். இது ஆட்குறைப்பு விருப்பபணி ஓய்வு முறையில் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

இதன் காரணமாக சுமார் 27 ஆயிரம் பேருக்கு வேலை காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஸ்டேட் வங்கியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர் சங்கங்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் வரும் ஏப்ரல் 1ந்தேதி முதல் ஸ்டேட் வங்கியுடன் இணைக்கிறது.

இந்நிலையில் சுமார் 10 சதவிகித அளவுக்கு ஆட்குறைப்பு செய்யப்படும் என்று ஸ்டேட் வங்கி இயக்குனர் அறிவித்திருப்பது வங்கி ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.