நாகர்கோவில்: நாட்டில் ஒற்றுமையை வலியுறுத்தி 150 நாட்கள் பாத யாத்திரை தொடங்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தனது பயணத்தை குமரியில் தொடங்குகிறார். இதையொட்டி செப்டம்பர் 7ந்தேதி குமரி கடற்கரை பகுதியில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மாநிலம் முழுவதும் மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் காங்கிரஸ் தொண்டர்கள் குமரிக்கு வருகை தருகின்றனர். இதையாட்டி பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி 3 ஆயிரத்து 750 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார். நாட்டில் ஒற்றுமையை வலியுறுத்தியும், கட்சியின் வளர்ச்சியை கருத்தில்கொண்டும் இந்த பாத யாத்திரை மேற்கொள்கிறார். வரும் 7ந்தேதி இதற்கான தொடக்க விழா நடைபெறுகிறது. தொடர்ந்து 8ந்தேதி முதல் 10ந்தேதி வரை குமரி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார். தொடர்ந்து, கேரளா, கர்நாடக என 12 மாநிலங்கள் வழியாக காஷ்மீர் சென்றடைகிறார்.
இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி கன்னியாகுமரியில் 7-ந்தேதி மாலை நடக்கிறது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் குமரியில் நடைபெறும் ராகுல்பாத யாத்திரை நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட உள்ளது. அதன்படி ஏராளமான பேருந்துகள், வாகனங்கள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 50ஆயிர பேர் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கன்னியாகுமரிக்கு வருகை தந்து ஆய்வு செய்து, மாவட்ட நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்தினர். குமரியில் ராகுல் பொதுக்கூட்டத்திற்காக பிரமாண்ட மேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஒரு குழுவினர் ராகுல் காந்தி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தொடக்க விழா நிகழ்ச்சியையொட்டி, கன்னியாகுமரி கடற்கரையையொட்டி உள்ள பகுதியில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதற்காக வட மாநில தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இந்த பொதுக்கூட்டம் நடைபெறும் பந்தலுக்குள் சுமார் 15,000 இருக்கைகள் அமைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வெளியே 10 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுகிறது. இதுதவிர மேலும் 25 ஆயிரம் வரை நிகழ்ச்சியை கண்டுகொள்ளும் வகையில், திரைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
7ந்தேதி பொதுக்கூட்ட நிகழ்ச்சியை முடித்துவிட்டு ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்க உள்ளார். முதல் நாள் 3.5 கிலோ மீட்டர் தூரம் தனது பாதயாத்திரை மேற்கொள்கிறார். 2-வது நாளான 8-ந்தேதி காலையில் 12 கிலோமீட்டர் தூரமும், மதியம் 6 கிலோமீட்டர் தூரம் என 18 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை செய்கிறார். 9-ந்தேதி காலையில் 9 கிலோமீட்டர் தூரமும், மதியம் 7 கிலோமீட்டர் என மொத்தம் 16 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார். 10-ந்தேதி காலையில் 9.5 கிலோமீட்டரும், மாலையில் 9 கிலோமீட்டர் என 18.5 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 56 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார்.
பாதயாத்திரை நடைபெற உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையிலான போலீசார் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். ராகுல் காந்தி பாதயாத்திரை நிகழ்ச்சியின் போது ஆங்காங்கே காங்கிரஸ் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
ராகுல் காந்தி வருகையையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் காங்கிரசார் சுவர் விளம்பரங்கள் செய்வதிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள். ராகுல் காந்தியை வரவேற்று பல்வேறு இடங்களில் ஆங்கிலத்தில் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளது.