சென்னை: நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள தமிழ்நாடு அரசு, தமிழகத்தில் 500 அரசுப்பள்ளிகள் தனியாருக்கு தத்துக்கொடுக்க முயற்சிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. இதற்கு திமுக கூட்டணி கட்சியான சிபிஐ(எம்) மற்றும் பாரதியஜனதா கட்சிகள் கடும் எதிர்ப்பும், கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.
“500 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியிருந்த நிலையில், இதன் நோக்கம் படிப்படியாக அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பதோடு, கல்வியை தனியார்மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக திணிக்கும் முயற்சியாகும்” என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து இருந்து வருவகிறது. ஆட்சி அதிகாரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, பொதுமக்களை கவரும் வகையில் இலவசங்களை வாரி இறைத்து, மேலும் மேலும் கடன்சுமையை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, இன்று நாட்டிலேயே அதிக கடன் உள்ள மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து வருகிறது.
மாநிலங்கள் தங்கள் இலவசங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மற்றும் நிலையான செலவினங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தினசரி செயல்பாடு களை விட எதிர்கால வளர்ச்சியில் அதிக முதலீடு செய்யுங்கள், தரப்படுத்தப்பட்ட அறிக்கையிடல் மற்றும் வலுவான தரவு அமைப்புகள் அவசியம். கடனைக் குறைப்பதற்கும் வருவாய்த் திறனை அதிகரிப்பதற்கும் மாநிலங்களுக்கு தெளிவான சாலை வரைபடம் தேவை. பாதை எளிதானது அல்ல, ஆனால் கவனமாக திட்டமிடல் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம், அவர்கள் தங்கள் வரவு செலவுத் திட்டங்களை சமப்படுத்தலாம் மற்றும் பிரகாசமான எதிர்காலத்தில் முதலீடு செய்யலாம் என ரிசர்வ் வங்கி மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்கி உள்ளது.
ஆனால், பல மாநிலங்கள் வாக்கு வங்கியை மட்டுமே கருத்தில்கொண்டு, விவசாயக் கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம், இலவச பேருந்து, மற்றும் பணப் பரிமாற்றம் ஆகியவற்றை வழங்குகின்றன. இவை உடனடி நிவாரணம் அளிக்கும் . அதே வேளையில், அவை மாநில நிதிகளில் கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. அதுபோல ஒரு நிதிச்சிக்கலில்தான் தமிழ்நாடு அரசு தள்ளாடிக்கொண்டு இருக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, 2022-23 நிதியாண்டிலும், 2021-22 நிதியாண்டிலும் தமிழகத்தின் மொத்த சந்தைக் கடன்கள் ₹87,000 கோடியாக இருந்தது. 2024-25ல் மொத்தமாக ₹1,55,584.48 கோடி கடன் வாங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள பள்ளிகளில், 500 அரசுப்பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் பதவி வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும், 37,554 அரசு பள்ளிகள் உள்ளன. இதில் பல லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இருந்தாலும், அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை விட தனியார் பள்ளிகளில் அதிக அளவு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதனால் மாதாமாதம் பல கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஓய்வு வயதை 60ஆக உயர்த்தியுள்ளதும், சூப்பர் அனவுன்சன் என்ற பெயரில் ஒய்வுபெற்ற பிறகும், ஒராண்டு ஆசிரியர்கள் தள்ளாத வயதிலும், பாடம் நடத்தக்கூட முடியாத நிலையில், லட்சக்கணக்கான சம்பளத்துக்காக மட்டுமே பள்ளிகளுக்கு வந்து செல்லும் அவலம் உள்ளது. இதற்கிடையில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும், 12 ஆயிரம் தனியார் பள்ளிகளில் ஏறக்குறைய 65 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் குறைந்த சம்பளத்தில் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை விட அதிக அளவிலான ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், நிதி சிக்கல் காரணமாக, தமிழகத்தில் 500 அரசுப்பள்ளிகள் தனியாருக்கு தத்துக்கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசின் பேச்சு, இதை உறுதிசெய்வது போல அமைந்துள்ளது.
திமுக அரசின் இந்த நடவடிக்கைக்கு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக கம்யூனிஸ்டு கட்சிகள், திமுகஅரசின் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை நேரடியாக விமர்சித்து வரும் நிலையில், இந்த விஷயத்திலும் நேரடியாக அமைச்சரை சாடியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதுபோல, மாணவ சமுதாயத்தின் கல்விக்குக் கூட, தனியார் அமைப்புகளிடம் உதவி கேட்கும் நிலையில் திமுக அரசு தள்ளப்பட்டிருக்கிறதா? அடிப்படை வசதிகளைக் கூட ஏற்படுத்தாமல், இந்த நிதியை என்ன செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு?” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த கல்வியாண்டில் (2025-2026) 500 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதன் நோக்கம் படிப்படியாக அரசுப்பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பதோடு, கல்வியை தனியார்மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக திணிக்கும் முயற்சியாகும். அரசுப்பள்ளிகள் தனியார்மயமாக்கப்பட்டால் ஏழை, எளிய, விளிம்புநிலை குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழகத்தில் ஏறக்குறைய 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இதில் அரசுப்பள்ளிகளில் 24310 தொடக்கப்பள்ளிகள், 7024 நடுநிலைப்பள்ளிகள், 3135 உயர்நிலைப்பள்ளிகள், 3110 மேல்நிலைப்பள்ளிகள் என 37579 பள்ளிகள் இயங்குகின்றன. அரசு உதவி பெறும்பள்ளிகள் 8328 செயல்படுகின்றன. இதில் 46 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
ஆனால் குறைந்த அளவு இயங்கும் 12 ஆயிரம் தனியார் பள்ளிகளில் ஏறக்குறைய 65 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அரசுப்பள்ளிகளின் மூன்றில் ஒரு பங்கு கூட செயல்படாத தனியார் பள்ளிகள் தான் அதிக அளவு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை விட தனியார் பள்ளிகளில் அதிக அளவு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 2500 பள்ளிகளில் கழிப்பறை வசதிகள்கூட இல்லையென்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆரம்பப்பள்ளிகளின் இடைநிற்றல் 16 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை பலப்படுத்தி கல்வித் தரத்தை மேம்படுத்தப்படுவதற்கு பதிலாக அரசுப்பள்ளிகளை தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு தத்துக்கொடுக்க முனைவது தமிழக ஏழை, எளிய உழைப்பாளி மக்கள் குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் செயலாகும்.
பல தனியார் பள்ளிகளில் விளையாட்டு மைதானம், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்டு அடிப்படை கட்டமைப்பு வசதிகளே கிடையாது. கல்வி கொடுக்க வேண்டியது அரசின் முதன்மையான கடமையாக இருக்க வேண்டுமே தவிர அரசு பள்ளிகளுக்கு செலவிடாமல் அதிலிருந்து தமிழ்நாடு அரசு தப்பிப்பது, நிதி சுமையை காரணம் காட்டி தனியாருக்கு தத்துக்கொடுப்பது முற்றிலும் நியாயமற்ற நடவடிக்கையாகும்.
அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 500 பள்ளிகளை தத்துகொடுக்கும் நடவடிக்கையினை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசே அதற்கான கூடுதல் நிதியை ஒதுக்கி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும். ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தும் பூர்த்தி செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “நேற்றைய தினம் நடைபெற்ற தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் துவக்க விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றான, 500 அரசுப் பள்ளிகள், அவற்றின் அருகிலிருக்கும் தனியார் பள்ளிகளால் மேம்படுத்தப்படும் என்ற தீர்மானத்தை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வரவேற்றிருக்கிறார். 500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தக் கூட தமிழக அரசிடம் நிதியில்லையா என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
தமிழக அரசின் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு, இந்த ஆண்டு மட்டும் ரூ.44,042 கோடி. இது தவிர, ஒவ்வொரு ஆண்டும், சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தனது தேர்தல் வாக்குறுதிகளில், சிதிலமடைந்த 10,000 அரசுப் பள்ளிக் கட்டிடங்களைப் புதிதாகக் கட்டிக் கொடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, நான்கு ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
சமீபத்தில், மாவட்டக் கல்வி அலுவலகங்களின் இணைய இணைப்புக் கட்டணமான ரூ.1.5 கோடியைக் கூட கட்டாமல், இணைப்பு துண்டிக்கப்படும் நிலைக்குச் சென்றது பள்ளிக் கல்வித் துறை. கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.44,042 கோடி எங்குதான் செல்கிறது? நாட்டின் நாளைய தூண்களான மாணவ சமுதாயத்தின் கல்விக்குக் கூட, தனியார் அமைப்புகளிடம் உதவி கேட்கும் நிலையில் திமுக அரசு தள்ளப்பட்டிருக்கிறதா? அடிப்படை வசதிகளைக் கூட ஏற்படுத்தாமல், இந்த நிதியை என்ன செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு?” என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.