பாட்னா,
500,1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தது மக்கள் மீது நடத்தப்பட்ட போலி என்கவுன்டர் என்று கூறியுள்ளார் லல்லுபிரசாத் யாதவ்.
கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறிய மோடி  புதியதாக ரூ.2000 நோட்டை அறிமுகப்படுத்தியது ஏன் கேள்வி எழுப்பி உள்ளார் முன்னாள்  மத்திய அமைச்சரும், பீகாரின் முன்னாள் முதன்மந்திரியுமான லல்லுபிரசாத் யாதவ்.

லல்லுபிரசாத் யாதவ்
லல்லுபிரசாத் யாதவ்

இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்கும்  நடவடிக்கையில் மோடி அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக,  புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை  செல்லாது என அறிவித்தும், அதற்கு பதிலாக புதிய 2000, 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை  அறிமுகப்படுத்தியும் நடவடிகை எடுத்து வருகிறது.
இதன் காரணமாக புதிய நோட்டுகள் வாங்கவும், பழைய நோட்டுகளை டெபாசிட் செய்யவும் மக்கள் கடந்த             10-ந்தேதி  இருந்து வங்கிகள் முன்னால் நீண்ட வரிசையில் நின்று ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றி வருகிறார்கள்.
இதற்காக அதிகாலையில் இருந்தே காத்துக்கிடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது மக்கள் கடும் அவதியை சந்தித்து வருகிறார்கள்.
மத்திய அரசின் இந்த  அறிவிப்புக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ஆம்ஆத்மி, திரினாமுல் போன்ற கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது ஒரு வாரம் கழித்து, பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும், ரெயில்வேதுறை முன்னாள் மத்திய அமைச்சருமான  லல்லு பிரசாத் யாதவ் தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் லல்லு எழுதியுள்ளதாவது,
கருப்புப் பணத்துக்கு நானும் எதிரானவன்தான் என்றாலும், அரசின் இந்த நடவடிக்கையில் தொலைநோக்கு சிந்தனை இல்லை என்று தெரிகிறது. மக்களுக்கு ஏற்படக்கூடிய அசவுகரியம் பற்றியும் அரசு சிந்தித்திருக்க வேண்டும்.
இந்த அறிவிப்பால் வங்கி வரிசையில் காத்து நிற்கும் மக்களின் எத்தனை மணிநேர உழைக்கும் நேரமும், உற்பத்தியும் வீணாகியுள்ளது?
இன்னும் 50 நாட்களுக்கு மட்டும் பொறுமை காக்கும்படி மக்களை கேட்டுக் கொண்டுள்ள நீங்கள் (பிரதமர்), உங்களது முந்தையை வாக்குறுதியின்படி இந்த 50 நாட்களுக்கு பிறகு மக்களின் வங்கிக் கணக்கில் தலா 15 லட்சம் ரூபாய் விழுந்து விடுமா? என்பதை தெரிவிக்க வேண்டும்.
makkal-kootam2
உங்களது இந்த முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு பிறகு மக்களுக்கு 15 லட்சம் ரூபாய் சென்று சேரவில்லை என்றால் இது மக்கள்மீது நடத்தப்பட்ட போலி என்கவுன்ட்டராகவே கருதப்படும்.
அரசுக்கு சொந்தமான வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை கடனாக பெற்று திருப்பி செலுத்தாத வர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இவர்களை பாதுகாக்கதானா, இந்த நாடகம்? என்பதுபற்றி மோடியின் அரசு விளக்கம் அளிக்க வேண்டும். அந்த பணமுதலைகளின் பட்டியலை பிரதமர் வெளியிட வேண்டும்.
கருப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறிகொண்டு, அதிக மதிப்பு கொண்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது ஏன்?
என அதிரடியான கேள்விகளை தனது டுவிட்டர் பக்கத்தில் லல்லு எழுப்பியுள்ளார்.