சென்னை: அதிமுகவை எந்த கொம்பன் நினைத்தாலும் ஆட்டவும், அசைக்கவும் முடியாது என்று கூறிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், சிறையில் இருந்து வந்தவுடன் சசிகலா ஏன் ஜெயலலிதா நினைவிடம் செல்லவில்லை?” என கேள்வி எழுப்பினார்.
அதிமுக பொன்விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நேரத்தில் சசிகலாவும், ஜெ.சமாதிக்கு சென்றுவிட்டு தொண்டர்களை சந்திப்பதாக அறிவித்து உள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் அதிமுகவின் பொன்விழா, சசிகலா விவகாரம், உள்ளாட்சி தேர்தல் மற்றும் புதிய அவை தலைவர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னணி தலைவர்கள், முக்கிய நபர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவை எந்த கொம்பன் நினைத் தாலும் ஆட்டவும், அசைக்கவும் முடியாது. இமயமலை போல இருக்கும் எங்களை பார்த்து பரங்கிமலை போல இருக்கும் சிலர் பேசுவது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை. எழுச்சியோடு அதிமுக பொன்விழாவை கொண்டாட கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
நான் அதிமுகவின் தொண்டனாக இருப்பதே எனக்கு பெருமை, பதவி என்பது இரண்டாம் பட்சம் தான் என்றும் எந்த பதவியாக இருந்தாலும் நான் அதை பணியாகத்தான் நினைப்பேன் என்று கூறியவர், அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் அதிமுகவை விட்டு வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள், பல சோதனைகளை தாண்டி மாபெரும் வெற்றிநடை போட்ட இயக்கம் அதிமுக தான்.
விமர்சனம் செய்தவர்களை எல்லாத்தையும் வீட்டிற்கு அனுப்பி, நாட்டிற்கு எப்போதுமே தேவை என்ற இயக்கமாக அதிமுக உள்ளது என்றுதெரிவித்தவர், சிறையில் இருந்து வந்தவுடன் சசிகலா ஏன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு செல்லவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.