தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சட்ட அமைச்சரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரமான சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டுகளுக்கு இடங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இளங்கலை படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 15%, முதுகலை படிப்பிற்கு எம்டிஎம்எஸ், எம்டிஎஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு 50% இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இந்த இடங்களுக்கான கலந்தாய்வு மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் எஸ்சிஎஸ்டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் தவிர இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு முறையில் சேர்க்கை நடத்தப்படுவது கிடையாது. மற்ற அனைத்து பிரிவுகளையும் பொதுப்பிரிவாக அமைத்து மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் குறைக்கப்படுகிறது.