விசாகப்பட்டினம்: ஆந்திரம் மாநிலத்தில் செயல்பட்டு வந்த தனியார் ஆலை ஒன்றில் ஏற்பட்ட விஷவாயு கசிவு காரணமாக அங்கு பணியாற்றி வந்த சுமார் 50 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரம் மாநிலம், அனகாபல்லே மாவட்டத்தில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தனியார் ஆடை உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த  ஆலையின் ஆடை உற்பத்தி பிரிவில்  திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், மயக்கம் அடைந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆலை நிர்வாகம், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை உடனே மீட்டு, முதலுதவி அளித்து, அருகில் உள்ள மருத்துவனையில் அனுமதித்தனர்.

மேலும் ஆலையின் வளாக்ததில் உள்ள மற்றவர்களையும் வெளியேற்றும் பணி நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்த அனகாபல்லே காவல்துறை கண்காணிப்பாளார் பாதிக்கப்பட்டவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், விஷவாயு கசிவு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

மேலும் விஷவாயு கசிவு குறித்த ஐதராபாத்தில் உள்ள இந்திய கெமிக்கல் டெக்னாலஜியின் நிபுணர்கள்  சம்பவ இடத்துக்கு சென்று கசிவுக்கான காரணத்தை கண்டறிய சோதனைகளை நடத்து மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.