வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும்! பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…

Must read

சென்னை: தமிழ்நாட்டிற்கு வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது.  இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் மொத்த எண்ணிக்கை 26,45,380 ஆக உள்ளது.  அதே வேளையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக்கப்பட்டு உள்ளது. அவ்வப்போது சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது.  கடந்த 12ஆம் தேதி நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 29 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேபோல் 19ந்தேதி நடைபெற்ற 1600 முகாம்களில் நடந்த 2ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 16லட்சத்து 43ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.  தற்போதைய நிலையில்,  தமிழக அரசிடம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என்று  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசி தேவை என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் கோவிட் டுப்பூசிகள் அதிக அளவில் போடப்பட்டு வரும் நிலையில் அக்டோபர் 31ம் தேதிக்கு முன்பாக தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசிகளை போடுவதற்காக வாரம்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

வாரத்தின் 6 நாட்களும் தினசரி 5 லட்சம் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு உள்ளது,   ஏழாவது நாளில் 20 லட்சம் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளது. அதனால், தடுப்பூசிகள் தேவை உள்ளது. ஆகவே மத்தியஅரசு வாரம் 50லட்சம் டோஸ்கள் தடுப்பூசி அனுப்பி வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

More articles

Latest article