சென்னை
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு அத்தொற்றால் உயிரிழக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 50 லட்சம் நிதியுதவி மற்றும் பல்வேறு சிறப்பு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் நாள் முழுவதும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பல மாநில அரசுகள் இப்பணியாளர்களுக்கு காப்பீடு உள்ளிட்ட நிவாரண உதவிகளை அறிவித்து வருகிறது. தமிழக முதலவரும் அதன் அடிப்படையில் மக்கள் பணியாளர்களின் சேவையைப் போற்றும் விதமாக இன்று அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
“மருத்துவம், தூய்மைப் பணி, காவல், உள்ளாட்சி ஆகிய துறைகளைச் சார்ந்தோர் கொரோனாத் தடுப்பு பணியில் ஈடுபட்டு அதனால் தொற்று ஏற்பட்டு இறக்க நேர்ந்தால் 50 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும்.
மருத்துவர், செவிலியர், தூய்மைப் பணியாளர், காவலர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் கொரோனா தடுப்பில் இறக்க நேர்ந்தால் அவர்களின் உடல் பாதுகாப்புடனும், முழு அரசு மரியாதையுடனும் அடக்கம் செய்யப்படும்.
இறந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். இறந்தோர் பெயரில் பரிசுகள் மற்றும் விருதுகள் அளிக்கப்படும்” என முதல்வர் அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு உயர்தர பாதுகாப்பு கவசங்களை அரசு வழங்கியுள்ளதாகவும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.