மதுரை:
மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் தேனி மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.50 கோடி வரை பண பரிமாற்றம் செய்தது குறித்து வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
பணமதிப்பிறக்க அறிவிப்புக்கு பிறகு கூட்டுறவு வங்கிகளில் பணம் பரிமாற்றம் செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கூட்டுறவு வங்கிகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் திடீரென சோதனை நடைபெற்றது. இதில் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் பணம் மாற்றப்பட்டது தெரியவந்துள்ளது.
சேலம், கடலூர் மத்திய கூட்டுறவு வங்கிகளில் பல கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்ததை வருமான வரித் துறை கண்டுபிடித்து, அங்கு சோதனை நடத்தியது. இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து மதுரை வடக்கு வெளி வீதியில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
 

இந்த வங்கி மதுரை, தேனி மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு தலைமை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. சுமார் 40 கிளைகள் வரை இதன் கீழ் இயங்கி வருகிறது.
கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் இந்த வங்கி கிளைகள் மூலம் முக்கிய பிரமுகர்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் ரூ.50 கோடி வரை பண பரிமாற்றம் நடந்து இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்தும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த அதிரடி சோதனையின்போது மதுரை, தேனி மாவட்டங்களில் உள்ள கிளைகளில் கம்ப்யூட்டர் மூலம் எவ்வளவு பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளது என்ற விவரங்களையும் அதிகாரிகள் சேகரித்து சென்றனர். யார் யாருக்கெல்லாம் பண பரிமாற்றம் நடந்துள்ளது என்பதையும் ஆய்வு செய்து வருகிறார்கள். முதல்வர் பன்னீர்செல்வத்தின் தொகுதியான அமைந்துள்ள தேனி மாவட்டத்துக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் அதிகளவில் பண பரிமாற்றம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.