புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த 50 பைலட்டுகளுக்கு, சட்டவிரோதமான பணிநீக்க கடிதங்கள் வந்திருப்பதாக, இந்திய வர்த்தக பைலட்டுகள் சங்கம், ஏர் இந்தியா தலைவர மற்றும் மேலாண்மை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்தக் கடிதங்கள், பணியாளர் நலத்துறையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய கடிதங்கள், நிறுவனத்தின் செயல்பாட்டு மற்றும் சேவை விதிமுறைகளுக்கு மாறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐசிபிஏ எனப்படும் இந்திய வர்த்தக பைலட்டுகள் சங்கம் தனது டிவிட்டர் பக்கத்தில், “என்ன நடக்கிறது? ஒரே இரவில் 50 பைலட்டுகள் வழக்கத்திற்கு மாறான முறையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த கொரோனா பரவல் காலத்தில், ஆபத்து நிறைந்த சூழலில், நாட்டுக்காகப் பயணியாற்றியவர்களுக்கு இதுதான் பரிசா?” என்று குறிப்பிட்டுள்ளது.
மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகமும், ஏர் இந்தியா நிறுவனமும், பிற விமான நிறுவன ஊழியர்களைப்போல், ஏர் இந்தியா பைலட்டுகள் பணிநீக்கம் செய்யப்படமாட்டார்கள் என்று ஏற்கனவே அளித்த உறுதிமொழியை நினைவூட்டியுள்ளது ஐசிபிஏ.