வேலூர்:
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தி லும் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்ற மர்ம காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன.
இந்த நிலையில், ஜோலார்பேட்டை அருகே 5 வயது சிறுமி மர்ம காய்ச்சலால் உயிரிழந்தார்.இது அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
ஜோலார்பேட்டை அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியை சார்ந்த சௌந்தர். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் அனிஷா (வயது 5) திருப்பத்தூரில் உள்ள மேரி மகாலிட் பள்ளியில் 1 வகுப்பு படித்து வந்தாள். இந்த சிறுமி கடந்த ஒரு வாரமாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இவரது காய்ச்சல் குணமாகாத நிலையில், மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கூறிய அப்பகுதி மக்கள், இந்த பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்க தொட்டி பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதன் காரணமாக இங்குள்ளவர்களுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதுகுறித்து பல தடவை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அப்பகுதி கிராம பஞ்சாயத்து செயலாளரிடமும் முறையிட்டுள்ளோம். அதுபோல கொசு மருந்து அடிக்கவும் வற்புறுத்தி வருகிறோம். ஆனால், அதிகாரிகள் எங்களின் கோரிக்கையை ஏற்பது இல்லை. இதன் காரணமாகவே, மர்ம காய்ச்சல் பரவி வருகிறது என்று குற்றம் சாட்டி உள்ளனர்.
பேட்டி: .சுப்பிரமணி. சிறுமியின் உறவினர்