துரை

துரை தெற்கு பகுதியில் டாஸ்மாக் கடைகளில் மது பானங்களைக் கூடுதல் விலைக்கு விற்ற 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மாதிரி புகைப்படம்

டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மது பானங்கள் விற்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன.  தவிர விற்பனை நேரத்துக்கு முன்பே மது பான விற்பனைகள் நடப்பதாகவும் புகார்கள் எழுகின்றன.   தமிழக அரசு அதிக விலைக்கு மது பானங்கள் விற்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதையொட்டி டாஸ்மாக் நிர்வாகம் பல இடங்களில் திடீர் ஆய்வுகளை நடத்தி வருகிறது.

அவ்வகையில் டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அருண் சத்யா, மதுரை தெற்கு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். காளவாசல் பகுதியில் செயல்படும் எலைட் மதுபான கடையில், அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதலாக 200 ரூபாய்க்கு மது விற்பனை செய்தது தெரியவந்தது. தவிர அங்குக் கடைக்குச் சம்பந்தமில்லாத நபர்கள் பணிக்கு அமர்த்தியதும் தெரியவந்தது.

இதையொட்டி கடையின் மேற்பார்வையாளர் ராஜா, விற்பனையாளர்கள் வேல் பாண்டி, இளமாறன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.  இதை போலவே எல்லீஸ் நகரில் செயல்படும் மதுபான கடையின் மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆய்வில்  திருமங்கலம் மதுபான கடையில், விற்பனை தொடங்காத நிலையில் கையிருப்பில் இருந்த 59 ஆயிரத்து 880 ரூபாய் குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.