டெல்லி: தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் மே மாதம் நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். வரும்  7ந்தேதி அவர் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைகளின் பதவிக்காலம் வருகிற மே, ஜூன் மாதங்களில் முடிவடைய உள்ளது. இந்த மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்து இம்மாத (பிப்ரவரி) இறுதியில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தலில் களமிறங்கும் பாஜக மற்றும், அதன் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.  ஏற்கனவே பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா  உள்பட பாஜகவினர் தமிழகம் உள்பட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடியும்,  பிரசாரம் செய்து ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளார்.

பிரதமர் மோடி, தனது முதல்கட்ட  தேர்தல் பிரசாரத்தை வருகிற 7-ந் தேதி மேற்கு வங்காளத்தில் தொடங்க இருக்கிறார். அன்றைய தினம் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஹல்தியா செல்கிறார்.

அந்த நிகழ்ச்சி முடிந்ததும் பா.ஜனதா சார்பில் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்று பிரதமர் பேசுகிறார். இந்த தகவலை மேற்கு வங்க பா.ஜனதா கட்சித் தலைவர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, அசாம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பிரசாரம் செய்ய உள்ளார்.