செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள், நிலவுக்கு அருகே ஒரே வரிசையில் தோன்ற உள்ளது.

இந்த வாரம், குறிப்பாக நாளை செவ்வாய் கிழமை வானில் நிகழப்போகும் இந்த அதிசயத்தை மக்கள் வெறும் கண்ணால் பார்த்து மகிழலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நாசா விண்வெளி ஆய்வாளர் பில் குக் கூறியுள்ளதாவது “இந்த வாரம் அதிலும் குறிப்பாக செவ்வாய் கிழமை அன்று மேற்கு திசையில் நிலவை ஒட்டி செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் வருவதைக் காண முடியும்.

உலகின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் வெறும் கண்களால் இந்த நிகழ்வை காண முடியும் என்ற போதும் வியாழன், வெள்ளி, செவ்வாய் போன்ற பிரகாசமான கிரகங்கள் நன்றாக தெரியும்.

புதன் மற்றும் யுரேனஸ் ஆகிய கிரங்கங்களை பைனாகுலர் கொண்டு பார்க்க முடியும் என்ற போதும் யுரேனஸ் கிரகம் வெள்ளி கிரகத்திற்கு மேலே பச்சை நிறத்தில் மிளிரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்தி சாயும் நேரத்தில் மேற்கு திசையில் தொடுவானம் அருகே ஒரு சில நிமிடங்கள் மட்டுமே இந்த ஐந்து கிரகத்தையும் ஒன்றாக பார்க்க முடியும் என்றும் அதற்கு வானமும் தெளிவாக இருந்தால் தான் சாத்தியம் என்றும் கூறியுள்ளார்.