சென்னை: மெரினா கடற்கரையில் விமானப்படை சாகசத்தைக் காண வந்த மக்களில் 5 பேர் உயிரிந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய மாநில அரசுகளின் மெத்தனம் என்றும், பொதுமக்களுக்கு போதிய வசதிகளை செய்யாத தமிழக அரசு தான் இந்த சாவுக்கு பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளனர்.
அதுபோல திமுக எம்.பி. கனிமொழி மட்டுமின்றி திமுக கூட்டணி கட்சிகயான காங்கிரஸ், விசிகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு. பெருங்களத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் (48), திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (34), கொருக்குப்பேட்டை ஜான் (56), தினேஷ் (37) உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளன.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “வான் சாகச நிகழ்ச்சியில் போக்குவரத்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும், போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்துவதற்கு போலீஸார் போதிய அளவில் இல்லை.
இதனால் மக்கள் கடும் நெரிசலில் சிக்கி, குடிநீர்கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக்கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாக சீர்கேடே உருவான விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்” என்று கூறியுள்ளார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “விமானப் படை சாகசம் சென்னையில் நடந்தது ஒரு வரப்பிரசாத நிகழ்வாகும். இந்த நிகழ்ச்சிக்கு 15 லட்சம் மக்கள் வருவார்கள் என விமானப் படையிலிருந்து தகவல் தெரிவித்தும், நிகழ்ச்சிக்கு தேவையான போதுமான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்யவில்லை. மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு மட்டும் வசதிகள் செய்யப்பட்டு, மக்களுக்கு எந்த வசதியையும் தமிழக அரசு செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விமான சாகச நிகழ்ச்சியை காண பொதுமக்கள் சாலைகளில் நெடுந்தூரம் நடந்து செல்ல வேண்டிய அவல நிலையே மக்களுக்கு ஏற்பட்டது. கையில் குழந்தைகளுடன் 5 முதல் 7 கிலோ மீட்டர் வரை பொதுமக்கள் நடந்து சென்றும் நிகழ்ச்சியைக் காண முடியவில்லை.
வெறும் 10 ஆயிரம் பேர் பார்க்கும் கார் பந்தயத்திற்கு 15 துறையினர் வேலை பார்த்த நிலையில், 15 லட்சம் மக்கள் வருவார்கள் என தகவல் இருந்தும் அதற்கான ஆய்வினையோ, பொதுமக்களுக்குத் தேவையான ஏற்பாடுகளையோ செய்தார்களா? என கேள்வி எழுப்பியவர்,
பேனா சிலைக்கும், கலைஞரின் மணிமண்டபத்திற்கும் கோடி கோடியாக பணம் செலவழிக்கும் இந்த அரசு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சிக்கு மக்கள் நிம்மதியாக அமர்ந்து பார்க்கும் வகையில் ஷாமியானா பந்தல் மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்த நிகழ்வு திமுக அரசின் நிர்வாக தோல்வியையே காட்டியுள்ளது. விமானப் படையிலிருந்து 10 நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு கொடுத்தும், முறையான ஏற்பாடு இல்லாததால் இன்று 3 பேர் உயிரிழந்ததற்கான முழு பொறுப்பையும் திமுக அரசு தான் ஏற்க வேண்டும்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் வசூல் ரூ.30 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.52 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. மதுக்களைத் தேடி தேடி விற்பதையே முழு மூச்சாகவும், முழு வீச்சாகவும் கொண்டு திமுக அரசு செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக்கை மூடவும், தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தவும் தமிழக அரசு தீர்மானம் இயக்கினாலே அனைத்தும் மூடப்படும்.
மேலும் துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் திமுக கட்சிக் கொடியை தலை முதல் கால் வரை, இடது முதல் வலது வரை என எப்படி வேணாலும் அணிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு அரசு நிகழ்ச்சியில் திமுக கொடியுடன் சென்றது ஏற்புடையதல்ல. உதயநிதியிடம் சட்டை இல்லை என்றால் கூட நாங்கள் வாங்கித் தருகிறோம். அரசுப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் சட்டை, பேண்ட் மற்றும் வேஷ்டி தான் அணிய வேண்டும் என்பது மரபு. இனி வரும் அரசு நிகழ்ச்சிகளில் உதயநிதி உடை விஷயத்தில் இதையே தொடர்ந்தால் அவருக்கு எதிராக அதிமுகவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்” என எச்சரித்தார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியைக் காண வந்த மக்களில் 5 பேர் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்த நிலையில் அவர்களில் பெரும்பான்மையானோருக்கு நிகழ்விடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது; நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்றுள்ளனர். விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகளைக் காண வந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதும், உயிரிழந்ததும் மிகுந்த வேதனையளிக்கின்றன.
விமானப்படை சாகச நிகழ்ச்சி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே சாகச நிகழ்ச்சியைக் காண 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என்றும், அதன் மூலம் உலக சாதனை படைக்கப்பட இருப்பதாகவும் விமானப்படை அதிகாரிகள் கூறி வந்தனர். அதைக் கருத்தில் கொண்டு 15 லட்சம் பேர் வந்தால், அவர்கள் எந்த சிக்கலும் இன்றி நிகழ்ச்சியைக் காணவும் நிகழ்ச்சி முடிந்த பிறகு பாதுகாப்பாக திரும்பிச் செல்லவும் போதுமான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும். ஆனால், எதிர்பார்க்கப்பட்டதை விட மிகவும் குறைவானவர்களே நிகழ்ச்சியைக் காண வந்தாலும் கூட அவர்களுக்கு போதிய வசதிகள் செய்யப்படவில்லை.
ஒரே நேரத்தில் நிகழ்ச்சி முடிந்து 7 முதல் 8 லட்சம் பேர் திரும்பும் போது, அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பொதுப்போக்குவரத்தை நம்பியிருக்கும் நிலையில் அதற்கான வசதிகளை தமிழக அரசு செய்திருக்க வேண்டும். ஆனால், தேவையான போக்குவரத்து வசதிகளில் 10% கூட செய்யப்படாததால் இரவு 10 மணிக்குப் பிறகும் கூட பேருந்து நிறுத்தங்களிலும், மெட்ரோ மற்றும் பறக்கும் தொடர்வண்டி நிலையங்களிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் நிற்பதை காண முடிந்தது. காலையில் தொடங்கி பிற்பகல் 1 மணி வரையில் சாகச நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திலும், அதன்பின் சாலைகளிலும் சுட்டெரிக்கும் வெயிலில் நின்றது தான் அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணம் ஆகும்.
லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளைக் கூட செய்ய முடியாத தமிழக அரசு, பாதுகாப்புத் துறையினர் கேட்ட ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து விட்டதாக பழியை அவர்கள் மீது போட்டு தப்பித்துக் கொள்ள முயல்கிறது. நிகழ்ச்சியைக் காண பொதுமக்கள் எவ்வளவு பேர் வருவார்கள்? அவர்கள் எந்த பாதிப்பும், இடையூறுமின்றி திரும்பிச் செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை. அந்தக் கடமையிலிருந்து தவறி விட்ட தமிழக அரசு தான் இந்த உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். வெற்று சவடால்களை விடுக்காமல் இனிவரும் காலங்களிலாவது இத்தகைய சூழல்களை எவ்வாறு கையாள்வது என்பதை திராவிட மாடல் அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், இந்திய விமானப்படை சார்பில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான வான் சாகசக நிகழ்ச்சியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தும், 200 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டிருப்பதும் அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.
பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளையும், போதுமான போக்குவரத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாமல், திமுக அரசு, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருந்திருப்பதே இதற்கு ஒரே காரணம்.
முதலமைச்சர் ஸ்டாலின், தனது சுய விளம்பரங்களுக்காக மேற்கொள்ளும் ஏற்பாடுகளைக் கூட, பல லட்சம் பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவில்லை என்பது, அவரது நிர்வாகத்தின் முழுமையான தோல்வியைக் காட்டுகிறது.
5 உயிர்களை இழந்திருப்பது, ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது. இதற்கு அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்யாமல் புறக்கணித்த திமுக அரசே முழு பொறுப்பு.
தன் குடும்பத்துக்காக மட்டுமே ஆட்சி நடத்தி, பொதுமக்கள் உயிரைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், 5 பேர் உயிரிழப்புக்கும், பல நூறு குடும்பங்களின் பரிதவிப்புக்கும் காரணமான முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களையும், திமுக அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பொதுமக்களுக்கு முதலமைச்சர் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் விமான சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் உற்சாகத்தோடு கடற்கரை நோக்கி திரண்டது மகிழ்ச்சி என்றால், அந்த மக்களின் உற்சாகத்தை, ஆர்வத்தை உணராமல் அரசு நிர்வாகம் செயலிழந்து போனதை கண்டு வருத்தம் ஏற்படுகிறது. ரயில் நிலையங்களில், பேருந்துகளில், மாநகர சாலைகளில் மக்கள் வெள்ளம் பெருகி வழிந்ததை சென்னை காவல்துறை கணிக்க தவறியது அதிர்ச்சி அளிக்கிறது. இது முழுக்க முழுக்க உளவுத்துறையின் தோல்வி என்றால் அது மிகையாகாது.
திமுக எம்.பி.கனிமொழி:
இதனைத் தொடர்ந்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது எக்ஸ் தளப் பதிவில், “சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “ கொளுத்தும் வெயிலில் சுமார் பத்துலட்சத்திற்கும் மேறபட்ட மக்கள் கூடும் பொழுது அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். அதன்காரணமாக உடலில் நீர்சத்து குறைந்து மயக்கம் ஏற்படும்.சிலருக்கு மாரடைப்பும் ஏற்படும். இது அறிவியல் எதார்த்தம். இதையெல்லாம் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்த பிறகே அரசு இந்த நிகழ்விற்கு பொதுமக்களை அனுமதித்திருக்க வேண்டும். விமானப் படை சாகச நிகழ்வில் நெரிசல்: 5 போ் உயிரிழப்பு! மெரீனாவில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள்; 240 போ் மயக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முறையான முதல் உதவி சிகிச்சை மையங்களையும் ஏற்பாடு செய்யவில்லை என்றே தெரிகிறது. குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானதையும் காண முடிகிறது. எந்த அரசு தன்நலன் பேணாது தன் மக்கள் நலனையே பெரிதாக பேணும் அரசோ அந்த அரசே மக்களுக்கான அரசாக விளங்கும். அரசின் கவனக்குறைவால் வான் படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல் வேதனை நிகழ்வாக மாறிவிட்டது. அரசு இனிவரும் காலங்களிலாவது இது போன்ற நிகழ்வுகளில் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினரான கார்த்தி சிதம்பரம் இந்த நிகழ்வு குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் “வானத்தில் சாகசம், தரையில் சோகம்” என்று பதிவிட்டுள்ளார்.