விழுப்புரம்: விழுப்புரம் அருகே  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் தற்கொலைக்கு கந்துவட்டி கொடுமையா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் அருகே உள்ளது புதுப்பாளையம் கிராமம். இந்த பகுதியில் தச்சுத்தொழில் செய்து வருபவர் மோகன் (வயது 40) இளைஞரான இவர், , வளவனூரில் மரக்கடையும் நடத்தி வருகிறார்.  இன்று காலை (டிசம்பர் 14ந்தேதி) அவரது கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் வந்த நிலையில், கடை திறக்கப்படாததால், மோகன் வீட்டுக்கு சென்று, கடையின் சாவியை வாங்கிவர அங்கு சென்றுள்ளனர். ஆனால்,  வீடு உள்பக்கம் பூட்டி இருந்த நிலையில், கதவை பலமுறை தட்டியும்  திறக்காததால்,  அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, மோகன் அவர் மனைவி விமலேஸ்வரி (வயது 37), தனித்தனியே தூக்கில் தொங்கினர். மேலும்,  அவர்களின் குழந்தைகளான ஒவிமலாஸ்ரீ (வயது 10), சிவபாலன் (வயது 5) , ராஜஸ்ரீ (வயது 3), ஆகியோர் ஒரே சேலையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்களும், பொதுமக்களும் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  விரைந்து வந்த  வளவனூர் போலீஸார், இறந்துகிடந்த 5 பேரின் உடல்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக  பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்ட மோகன், தற்போது  தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி மீண்டும் கடையை திறந்துள்ளார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரமும், வேலையும் கிடைக்காததால்,  கடன் தவணையைக் கட்ட முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். இதன் காரணமாக அவர் தனது  தன் குழந்தைகளை ஒரே சேலையில் தூக்கிட்டுக் கொன்றுவிட்டு, அவர் தன் மனைவியுடன் தனித்தனியே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தனியார்  நிதி நிறுவனம் சார்பில், மோகனுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.