சென்னை: தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழ்நாட்டில், 5லட்சம் பேருக்கு தமிழில் எழுதப் படிக்க தெரியாது என்பது தெரிய வந்துள்ளது. இது தமிழ்நாட்டின் அவலமாக பார்க்கப்படுகிறது.
சமீபத்திய (2023) மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் மக்கள் தொகை 72,147,030 பேர், 36,137,975 ஆண்கள் மற்றும் 36,009,055 பெண்கள். இவர்களில் சுமார் 5 லட்சம் பேர் தமிழ் மொழியை வாசிக்கவோ, எழுதவோ தெரியவில்லை என்பது, தமிழகத்துக்கு வெட்கக்கேடு.
உலகிலேயே பழமையான மொழி தமிழ் என்று போற்றப்படுகிறது. இதற்கு சான்றாக ஏராளமான கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. அதுபோல தமிழனின் கலாச்சாரம் பாரம்பரியமானது. ஆனால், இன்றைய நவீன காலத்தில், இன்றைய தலைமுறையினர் தாய் மொழியில் பேசுவதையே கவுரவ குறைவாக நினைக்கின்றனர். அதுபோல மாநிலத்தை ஆட்சி செய்து வரும் ஆட்சியாளர்களும், தமிழ், தமிழ் என கூறி தமிழர்களை வஞ்சித்தே வருகின்றனர். அதன் எதிரொலி இன்று தமிழ்நாட்டில் ஏராளமானோர் தாய்மொழியான தமிழைக்கூட எழுத, படிக்கத் தெரியாத நிலையே உள்ளது.
அதுபோல பல அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள்கூட தமிழை இலக்கன பிழையின்றி எழுத, வாசிக்க மட்டுமின்றி முறையாக பயிற்றுவிக்க தெரியாத அவல நிலையே உள்ளது. இதுமட்டுமின்றி பல பிரபலங்கள், எனக்கு தமிழ் தெரியாது என்பதை தமிழிங்கிலிஷில் பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதுபோல பாடல்களும் தமிழையும், தமிழ் மொழியையும் கொலை செய்வதாக உள்ளது. இதை கைதட்டி ரசிக்கவும் தமிழன் தயாராகி விட்டான். அதன் பாதிப்பு, தமிழ் மொழியை எழுத, வாசிக்கக்கூட பலர் விரும்புவது இல்லை என்பது தெரிய வந்துள்ளது. கோவை மாநகர உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஒருவர் பதவி ஏற்பு விழாவின்போது, தமிழை பேசக்கூட தெரியாமல் அவஸ்தை பட்டது அனைவரும் அறிந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மாநிலம் முழுவதும் தமிழ் எழுத படிக்க தெரியாதவர்கள் குறித்து எடுத்த கணக்கெடுப்பில், சுமார் 5 லட்சம் தமிழில் எழுத படிக்க தெரியாத நிலையிலேயே உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
முறைசாரா கல்வி இயக்குநரகம் சார்பில் தமிழகக் கிராமங்கள், நகரங்களில் எழுத்தறிவு பெறாதவர்களைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த கல்வியாண்டில் எழுத்தறிவு பெறாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறித்து மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ஐந்து லட்சம் பேர் தமிழ் எழுத்துகளைக் கூட அறியாதவர்களாக இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
சென்னையில் மட்டும் 11,869 பேருக்கு தமிழ் எழுத்துகள் வாசிக்கக்கூட தெரியவில்லை. தமிழகத்திலேயே சேலம் மாவடத்தில்தான் ஆக அதிகமாக 40,191 பேருக்கு தமிழ் எழுத்துகள் தெரியவில்லை என்றும் அவர்களில் 29,176 பேர் பெண்கள் என்பதும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
மேலும், தமிழ் தெரியாத 5 லட்சம் பேரில் பெரும்பாலானோருக்கு ‘அ, ஆ, இ, ஈ’ என்ற அடிப்படைத் தமிழ் எழுத்துகள்கூட தெரியவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இது தமிழ் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கல்வித்துறை அதிகாரிகள், தமிழ் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு சான்றிதழும் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளர்.
தமிழ்நாட்டின் தாய்மொழியான தமிழைக்கூட வாசிக்க தெரியாமல் பலலட்சம் இருப்பது குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள கல்வி ஆர்வலர்கள், அனைத்து மாவட்டங்களையும் முழுமையான எழுத்தறிவு பெற்ற மாவட்டங்களாக மாற்ற தமிழ்நாடு அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
முன்னதாக புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் எழுத, படிக்க தெரியாத, 15 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறியும் கணக்கெடுப்பு பணி, மாவட்ட வாரியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில், கிராம அளவில் எழுத, படிக்க தெரியாதவர்கள் குறித்த விபரங்களை சேகரிக்கும் பணிகளை, மே முதல் வாரத்தில் துவங்க வேண்டும். இதற்கு பள்ளி, கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் போன்ற, கல்வி சாரா இணை அமைப்புகளில் பங்கேற்றுள்ள மாணவர்களை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்களையும், இந்த கணக்கெடுப்பில் பங்கேற்க வைக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்தான், தற்போது கணக்கெடுப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மொழிப்போா் தியாகிகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் மட்டும் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள், சமுக அமைப்புகள் தங்களது வீர தீர செயல்கள் என எதையாவசி பேசி, மொழிப்போா் தியாகிகளின் கல்லறையில் மலா் வளையம் வைத்து மறைந்து விடுவார்கள். இதனால் தமிழ்நாட்டில்கூட தமிழ் வளர்ச்சி என்பது கேள்விக்குறியாக உள்ளது.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவா்கள்கூட அரசு பணிக்கு மட்டும் தமிழ் கட்டாயம் என்று கூறியதோடு தங்களது தமிழ் பற்றை நிறுத்திக்கொண்டனர். தமிழ் மொழியை தங்களது ஆதாயத்துக்காவும், அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதனால்தான் அவர்கள் தங்களது குழந்தைகளைக்கூட தமிழ் பள்ளிகளில் படிக்க வைப்பதை விரும்புவது இல்லை.
அதுபோல பிரதமர் மோடி, மிழ்நாட்டுக்கு வரும்போதெலலாம் தமிழ் மொழியின் தொன்மையையும், சங்க இலக்கியங்களின் சிறப்பையும், திறக்குறளின் பெருமையையும் பேசுவதுடன், உலகின் பழமையான மொழி தமிழ் என்று கூறி வருகிறார். ஆனால், அந்த தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில் ஆர்வம் காட்டுவது இல்லை. அதாவது, எட்டாவது அட்டவணையில் உள்ள 22 இந்திய மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ள நிலையில், அதை ஆட்சி மொழியாக அறிவிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுவது இல்லை, அதுபோல, தமிழை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்குவதற்கும் முன்வருவது இல்லை.
இந்த நிலையில், தமிழ் பேசும் பலர் தமிழை வாசிக்கவோ, எழுதவோ தெரியாத நிலை, தமிழ் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தி மொழிக்கு எதிராக போராடுவதை விட்டுவிட்டு, இனி தமிழ் மொழிக்காக போராட வேண்டிய நிலை உருவாகி வருவதாக தங்களது மனக்குமுறலை கொட்டி வருகின்றனர்.
ஒவ்வோா் ஆண்டும் ஜனவரி 25 அன்று அன்று மட்டும் மொழிப்போா் தியாகிகளின் கல்லறையில் மலா் வளையம் வைத்து அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினால் மட்டும் போதாது, தாய்மொழியான தமிழ் மொழியை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டும்… அரசு பள்ளிகளில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதுடன், தமிழ் மொழிக்காக தமிழாசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். அதுபோல, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் குழந்தைகள் கண்டிப்பாக அரசு பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டும்…. இல்லையேல் தமிழ் மெல்ல சாகும் என்பதை மறுக்க முடியாது.