சென்னை:
5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்றிரவு சென்னை வரவுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை போட்டுக் கொள்ள தொடக்கத்தில் தயக்கம் இருந்தது. ஆனால், கோவிட் ஏற்படாமல் தடுக்க தடுப்பூசிகளே முக்கியமான பங்கை வகிப்பதால் இப்போது பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருகின்ற்னர்.
இந்த நிலையில், தற்போது தடுப்பூசி பற்றாக்குறையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியும், கோவிஷீல்டு தடுப்பூசியும் நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை.
உடனடியாக தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. தமிழக மக்கள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதற்காக தமிழக அரசு தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்யும் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.
இதனையடுத்து கடந்த வாரம் 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னைக்கு வந்து சேர்ந்தன. விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பூசி மருந்துகளை பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்றிரவு சென்னை வரவுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.மேலும், திருச்சி மாவட்டத்திற்கு 18,500 தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தகவல் தெரியவந்துள்ளது.