சாத்தூர்
நேற்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த பூமாரி (60) க்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தில் உள்ளது. இந்த ஆலையைப் பூமாரியின் மகன்கள் கருப்பசாமி (44), பரமேஸ்வரன் (41), நாகேந்திரன் (38), ஆறுமுகம் (35) ஆகியோர் நிர்வகித்துள்ளனர். இந்த ஆலை டிஆர்ஓ உரிமம் பெற்றுள்ளது. இந்த ஆலையில் மொத்தம் உள்ள 6 அறைகளில் கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம், புஸ்வாணம் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன.
இங்கு நேற்று காலை பட்டாசு தயாரிக்கும் பணியில் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பூமாரியின் மகன் கருப்பசாமி (44), பணியாளர் செந்தில்குமார் (35) இருவரும் பட்டாசுகளுக்குத் தேவையான வெடிமருந்துகள் கலக்கும் பணியில் ஈடுபட்டபோது, உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டு ஒரு அறை தரைமட்டமானது.
இதனால் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உரிமையாளர் பூமாரி (60), மகன் கருப்பசாமி, செந்தில்குமார், மஞ்சள்ஒடைபட்டியை சேர்ந்த முனியசாமி (45) கண்ணகுடும்பன்பட்டியைச் சேர்ந்த காசி (40) கொம்மிங்காபுரத்தை சேர்ந்த பெருமாள் (40), சரஸ்வதி (40) அய்யம்மாள் (38) ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்துத் தகவலறிந்து சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்புத்துறையினர் வந்து காயமடைந்தவர்களை மீட்டு சாத்தூர், கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் சேர்த்தனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் செந்தில்குமார், கருப்பசாமி, சாத்தூர் அரசு மருத்துவமனையில் காசி ஆகியோரும், திருநெல்வேலிக்கு மேல் சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்ட அய்யம்மாளும் உயிரிழந்தனர்.
பூமாரி உட்பட 4 பேர் மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், தீக்காயம் அடைந்து மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மஞ்சள்ஒடைபட்டியை சேர்ந்த முனியசாமி (45) சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதனால் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.