டெல்லி: நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியை கடந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், 2024 ஜனவரி மாத நிவலரப்படி  உச்சநீதிமன்றத்தில் மட்டும்  80,221 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகள் நிலவரப்படி நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

2020-ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி உச்சநீதிமன்றத்தில் 59,859 வழக்குகள் நிலுவையில் இருந்தது. கடந்த மாதம் மட்டும் 1,966 வழக்குகள் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2,420 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

பொது விடுமுறையை தவிர்த்து 20 நாள்களில் நாளொன்றுக்கு 121 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் உள்ள உயர்நீதிமன்றங்களில் 62 லட்சம் வழக்குகளும், மாவட்டம் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் 4.47 லட்சம் வழக்குகளும் நிலுவையில் உள்ளது.

இதில், 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 1.10 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 15ந்தேதி அன்று மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய மத்திய சட்டஅமைச்சர் கிரண் ரிஜ்ஜூ , நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன, உச்ச நீதிமன்றத்தில் 80,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன என கூறியிருந்தார்.

அதன்படி, 2023 டிசம்பர் 1 நிலவரப்படி நிலுவையில் உள்ள 5,08,85,856 வழக்குகளில், 61 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் 25 உயர் நீதிமன்றங்களில் உள்ளன. மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 4.46 கோடி வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்திய நீதித்துறையின் ஒட்டுமொத்த அனுமதிக்கப்பட்ட பலம் 26,568 நீதிபதிகள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட பலம் 34 ஆகவும், உயர் நீதிமன்றங்களின் அனுமதிக்கப்பட்ட பலம் 1,114 ஆகவும் உள்ளது.

மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 25,420 நீதிபதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.