சென்னை: ராஜீவ்கொலை வழக்கு கைதி பேரறிவாளனுக்கு 4வது முறையாக மீண்டும் திமுக அரசு பரோலை நீட்டித்து உள்ளது.
ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேர் ஆயுள்தண்டனை பெற்று கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அறிவித்த நிலையில், தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது. ஆனால், இதுவரை அதற்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. அதுபோல, அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக பதவி ஏற்றதும், ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் தரப்பில் விடுமுறை கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதைதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டு, முதலில் பேரறிவாளனுக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்கினார். இதையடுத்து, அவர் கடந்த மே 28ந்தேதி தனது சொந்த ஊருக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப் பட்டார். தொடர்ந்து அவரது அம்மா அற்புதம்மாள் முதல்வருக்கு மனு கொடுப்பதும், பரோல் நீட்டிப்பதுமாக தொடர்ந்து வருகிறது.
பின்னர் சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு பேரறிவாளன் மருத்துவ சிகிச்சை எடுப்பதாக கூறி அவ்வப்போது பரோல் கேட்டுவருவதும், பரோல் காலத்தை மேலும் நீடிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு விடுத்த கோரிக்கை விடுப்பதும் வாடிக்கையாகி வருகிறது.
இந்த நிலையில், பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பேரறிவாளன் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருவதால், அவருக்கு பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பேரறிவாளன் மே 28ந்தேதி பரோலில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து, 4வது மாதகமா பரோல் நீட்டிப்பு பெற்றுள்ளார். செப்டம்பர் 28ந்தேதி வரை பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.