டெல்லி: 49வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், வரி ஏய்ப்பை தடுப்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து ஆலோசிக்க ஜி.எஸ்.டி., கவுன்சில் அமைக்கப்பட்டு, இதற்கான கூட்டம் குறிப்பிட்ட கால இடைவெளியில் கூடி விவாதித்து வருகிறது. இதுவரை 48முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூடி விவாதித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், 49வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது.
கடந்த டிசம்பரில் நடந்த 48வது கவுன்சில் கூட்டத்தில், விவாதிக்க எடுத்துக்கொள்ளப்பட்டு விடுபட்ட விஷயங்கள் நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. மேலும், ஒடிசா நிதிஅமைச்சர் நிரஞ்சன் பூஜாரி தலைமையிலான அமைச்சர்கள் குழு, பான் மசாலா மற்றும் குட்கா வணிகத்தில் வரி ஏய்ப்பைத் தடுக்க பரிந்துரைத்த வழிமுறைகள் குறித்து குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுமட்டுமின்றி, ஆன்லைன் விளையாட்டுக்கான ஜிஎஸ்டி வரி மற்றும், . ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் அமைப்பது குறித்து, ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான குழு பரிந்துரைத்த வழிமுறைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.