ஷிம்லா:

பிரபல பாலிவுட் நடிகர், ஜிதேந்திரா, 47 ஆண்டுகளுக்கு முன், பாலியல் பலாத்காரம் செய்ததாக சமீபத்தில் அவரது,  உறவுப் பெண்மணி ஒருவர் புகார் கூறினார்.

இந்த புகாரில் இன்று ஜிதேந்திரா மீது  எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கையை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

இந்தி நடிகர், ஜிதேந்திரா, ( வயது  75)  மீது, அவரது நெருங்கிய உறவுப் பெண், ஹிமாச்சல பிரதேச காவல்துறையில் புகார் அளித்தார்.

அதில், “நடிகர் ஜிதேந்திரா, 47 ஆண்டுகளுக்கு முன், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள, ஷிம்லா நகரில் நடக்கும் சினிமா படப்பிடிப்பை காண வரும்படி, என்னை அழைத்தார்.அப்போது, எனக்கு வயது, 18. ஷிம்லா நகர விடுதி அறையில் தங்கியிருந்த போது, இரவில் என் அறைக்கு வந்த ஜிதேந்திரா, என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அவர் மீது, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரின்படி, ஜிதேந்திராவுக்கு எதிராக, ஷிம்லா காவல்துறையினர், இன்று எப்.ஐ.ஆர்., பதிவு செய்துஉள்ளனர். இது குறித்து, காவல்துறை கண்காணிப்பாளர், உமாபதி ஜம்வால்,  செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“ஜிதேந்திரா மீது, ஒரு பெண்மணி,  மின்னஞ்சலில், பாலியல் புகார் அளித்தார்.  பின், எழுத்து மூலம் புகாரை அனுப்பினார்.

அதன்படி இன்று, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு உள்ளது. 1971ம் ஆண்டு நடப்பில் இருந்த சட்டப்படி, இப்புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புகார் அளித்த பெண், நடிகருடன் தங்கியிருந்த ஓட்டல் பெயரை, இதுவரை தெரிவிக்கவில்லை. அங்கு தங்கி இருந்ததற்கான ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை” என்று அவர் கூறினார்.

நடிகர், ஜிதேந்திரா மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகாரை, அவரதுவழக்கறிஞர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.