சென்னை: ஆவின் நிறுவனத்தில் பணியாற்றியவர்களில் பணிக்காலத்தின்போது உயிரிழந்த 47 பேரின் வாரிசுதாரர்களுக்கு, ஆவினில் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்ககப்பட்டு உள்ளது. பணி நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினர்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் (ஆவின்) பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 47 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளையும், துணைப்பதிவாளர் (பால்பதம்) அலுவலகத்தில் பணிபுரிந்த காலத்தில் உயிரிழந்த ஒரு பணியாளரின் மனைவிக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையினையும் வழங்கிடும் அடையாளமாக 10 வாரிசுதாரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
மேலும் ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்களை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் விற்பனை செய்ய முதற்கட்டமாக 6 மொத்த விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வணிக ஒப்பந்த ஆணைகளையும் முதல்வர் இன்று வழங்கினார்.
அண்ணா பால் உற்பத்தியாளர்கள் நலநிதித் திட்டத்தின்கீழ் விபத்தினால் உயிரிழந்த பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ. 2.50 இலட்சம், கல்வி உதவித்தொகை ரூ.25,000/- திருமண உதவித்தொகை ரூ.30,000/-, விபத்தினால் உயிரிழந்த பால் உற்பத்தியாளர்களின் ஈமச்சடங்கிற்கு ரூ. 5,000/- என 44 பயனாளிகளுக்கு ரூ. 1,04,25,833/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குவதன் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., கால்நடைப் பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் தெ.சு. ஜவஹர், இ.ஆ.ப., ஆவின் மேலாண்மை இயக்குநர் கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.